Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.. படம் எப்போது ரிலீஸாகும்?

Jananaayagan censor case verdict today: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (ஜனவரி 27) காலை 10.30 ஜனநாயகன் வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்குகிறது. இதனால், தீர்ப்பு படக்குழுவுக்கு சாதகமாக வருமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பும், தவெக தொண்டர்ளின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.. படம் எப்போது ரிலீஸாகும்?
ஜனநாயகன் பட வழக்கில் இன்று தீர்ப்பு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Jan 2026 08:03 AM IST

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் இன்று (ஜனவரி 27) காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இத்திரைப்படம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று வெளியாகும் தீர்ப்பு மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்து, கடைசி நேரத்தில் ரலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

இதையும் படிக்க: சாலைகளில் விசிலுடன் வலம் வரும் தவெகவினர்.. கடைகளில் விசில் விற்பனை அமோகம்..

அடுத்தடுத்த ஜனநாயகன் படத்திற்கு எழுந்த சிக்கல்:

ஜனநாயகன் படம் சென்சார் சான்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மத்திய தணிக்கை குழு வாரியம் சான்றிதழ் தர மறுத்து, மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியது. இதனால், படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, படத் தயாரிப்புக் குழு வாரியத்தின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனவரி 9 அன்று, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்தார். அதோடு, ‘ஜனநாயகன்’ படத்திற்கு எந்தத் தடையுமின்றி உடனடியாகச் சான்றிதழ் வெளியிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதனால், விஜய் ரசிகர்கள் பொங்கலுக்கு படம் ரிலீஸாகி விடும் என மகிழ்ச்சியடைந்தனர்.

வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்:

ஆனால், அந்த மகிழ்ச்சி சற்றுநேரம் நீடிப்பதற்குள், தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து, அன்றைய தினமே மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த உத்தரவை சற்றும் எதிர்பாராத ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம், படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்தாக வேண்டும் என தீவிரம் காட்டியது. இதன் காரணமாக இந்த இடைக்காலத் தடையை உடனடியாக நீக்கக் கோரி, படத் தயாரிப்புக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திலேயே அணுகுமாறு திட்டவட்டமாக அறிவுறுத்தி, மனுவை முடித்து வைத்தனர்.

வழக்கை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்:

தொடர்ந்து, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் ஜனவரி 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியமும், தயாரிப்பு நிறுவனமும் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் முக்கியக் கருத்துக்களை முன்வைத்தனர். நீதிபதிகள், “நீதிமன்ற நடைமுறைகளை ஒரே நாளில் முடித்து தீர்வு கோருவது ஏற்க இயலாது. சான்றிதழ் பெறும் முன் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யக் கூடாது என தயாரிப்பு நிறுவனத்தை கண்டித்தனர். அதோடு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தீர்ப்பு:

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (ஜனவரி 27) காலை 10.30 ஜனநாயகன் வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்குகிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பும், தவெக தொண்டர்ளின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தீர்ப்பு படக்குழுவுக்கு சாதகமாக வரும் பட்சத்தில் பிப்.6 அல்லது பிப்.13ம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிகிறது. ஒருவேளை தணிக்கை வாரியக்குழு படத்தை மீண்டும் பார்வையிட 20 நாட்கள் அவகாசம் கேட்கும் பட்சத்தில், படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், அதற்கு அடுத்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிவிடும் என்பதால், படத்தை வெளியிட்டால் வசூலில் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.