Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாலைகளில் விசிலுடன் வலம் வரும் தவெகவினர்.. கடைகளில் விசில் விற்பனை அமோகம்..

TVK members are roaming the streets with whistles: தவெக உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து மொத்தமாக விசில் வாங்கிச் செல்வதால், சந்தைகளில் விசில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சாலையோர பேன்சி கடைகளிலும் விசில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சாலைகளில் விசிலுடன் வலம் வரும் தவெகவினர்.. கடைகளில் விசில் விற்பனை அமோகம்..
விசிலுடன் வலம் வரும் தவெகவினர்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Jan 2026 13:18 PM IST

சென்னை, ஜனவரி 24: விஜய்யின் கட்சிக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தைகளில் விசில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அவற்றை அதிக அளவில் வாங்கி வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம், ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, தவெக உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தங்களின் சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, அவர்கள் கடைகளில் விசில்களை வாங்கி, பொதுமக்களுக்கு விநியோகித்து, கழுத்தில் அணிந்துகொண்டு ஊதி, இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : ‘அதிமுக உடனான கூட்டணியால் அதிருப்தி’.. திமுகவில் இணைந்த அமமுக துணை பொதுச்செயாலளர்..

விசில் விற்பனை அமோகம்:

இதன் காரணமாக, தற்போது சந்தைகளில் விசில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில், பிராட்வே மற்றும் புரசைவாக்கம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள வணிகப் பகுதிகளில் விசில் விற்பனை சூடுபிடித்துள்ளது. தவெக உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து மொத்தமாக விசில் வாங்கிச் செல்கின்றனர். சாலையோர பேன்சி கடைகளிலும் விசில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறும்போது, விசில் சின்னம் கிடைத்தது மகிழ்ச்சி என்றும், மக்களிடம் அந்த சின்னத்தை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விசில் பற்றித் தெரியும். அனைத்து நிர்வாகிகளும் விசில் வாங்கி, பொதுமக்களுக்கு விநியோகித்து, நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தியுள்ளது. எனவே, இனிமேல் அனைத்து நிகழ்ச்சிகளும் விசிலுடன் தான் நடைபெறும்” என்று கூறினர்.

விசில்களை அள்ளிச்செல்லும் தவெகவினர்:

பேன்சி கடைகளில், 12 விசில் கொண்ட ஒரு பாக்கெட் மொத்த விலையில் ரூ. 35-க்கு விற்கப்படுகிறது. ஒரு விசில் சில்லறை விலையில் ரூ. 10-க்கு விற்கப்படுகிறது. விசிலின் வகை மற்றும் அளவைப் பொறுத்து விலை மாறுபடுகிறது. பொதுவாக, பொதுமக்கள் குழந்தைகள் கேட்டால் மட்டுமே விசில் வாங்குவது வழக்கம். இப்போது விசில் தமிழக வெற்றிக் கழகத்தின்  கட்சிச் சின்னமாக மாறியுள்ளதால், கடைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த விசில் அனைத்தும் உயிர் பெற்றதைப் போல, கட்சி நிர்வாகிகள் அவற்றை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிக்க : சென்னை தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் அனுமதி…அடையாள அட்டை கட்டணத்தில் அதிரடி மாற்றம்!

சமூக வலைதளங்களில் பிரச்சாரம்:

விசில் சின்னம் சமூக ஊடகங்களிலும் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சி உறுப்பினர்கள் இதை விரிவாகப் பிரச்சாரம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதையொட்டி, கடந்த 2 நாட்களாக விசில் ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. அதேபோல், அண்மையில் நடைபெற்ற திருமண விழாக்களில் கூட, மணக்கள் விசில் ஊதி, தவெகவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.  சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, தவெக உறுப்பினர்கள் ஏற்கனவே துண்டுப் பிரசுரங்களுடன் எல்லா இடங்களிலும் வீதிகளில் வலம் வரத் தொடங்கிய நிலையில், தற்போது விசிலுடனும் சுற்றி வருகின்றனர்.