பாடல்களின் உரிமையை தயாரிப்பாளருக்கு வழங்கவில்லை…. நீதிமன்றத்தில் இளையராஜா உறுதி
Ilaiyaraaja : குட் பேட் அக்லி படத்தில் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நவம்பர் 6, 2025 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி படத்தில் தன்னிடம் அனுமதி பெறாமல் தன் பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja) தரப்பில் நவம்பர் 6, 2025 அன்று
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளருக்கு ஒருபோதும் வழங்கியதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் (Ajith Kumar) முதன்மை வேடத்தில் நடித்திருந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்த இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த உத்தரவை நீக்குமாறு அந்தப் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. அவர்களது மனுவில் சோனி மியூசிக் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி பாடல்களின் உரிமையை வாங்கினோம் என்றும் அதற்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சேர்த்து, அவர்களும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க : ரஜினிகாந்த – கமல்ஹாசனின் கூட்டணி குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
‘பாடல்களின் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டும் தான்’
இந்த வழக்கு மீதான விசாரணை நவம்பர் 6, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இளையராஜா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சரவணன் தனது வாதத்தை முன் வைத்தார். அப்போது பேசிய அவர், இளையராஜா எந்த தயாரிப்பாளருக்கும் பாடல்களின் உரிமையை வழங்கவில்லை. காப்புரிமை சட்டத்தின் படி இசையமைப்பாளருக்கே அவர் இசையமைத்த பாடல்களின் உரிமை உண்டு. தயாரிப்பாளருக்கு முழு படத்தின் மீதான உரிமை இசையமைப்பாளர்களுக்கே உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பாடல்களை தனியாக விற்பனை செய்ய முடியாது என்றார்.
மேலும் பேசிய அவர், இசையமைப்பாளரின் அனுமதி இல்லாமல் பாடல்களை மாற்றுவது, திருத்துவது, அல்லது வேறு வடிவில் வெளியிடுவது, அவரது கலை மரியாதைக்கும் காப்புரிமை சட்டத்திற்கும் எதிரானது. அத்துடன், குட் பேட் அக்லி திரைப்படத்தில் மூன்று பாடல்கள் மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும்,
இது காப்புரிமை சட்டத்தை மீறுவதாகவும் வாதிட்டார்.
இதையும் படிக்க : ’டிஎன்ஏவில் நிரூபிக்கப்பட்டால் குழந்தையை கவனிப்பேன்’ – மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பரபர அறிக்கை!
தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்வாதம்
குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.வி. பாலசுப்பிரமணியம், திரைப்படத்தின் முழு உரிமையும் தயாரிப்பாளருக்கே உள்ளது. இளையராஜாவுக்கு பாடல் உரிமை உண்டு என்றால், அதை நிரூபிக்க வேண்டும் என்று வாதிட்டார். மேலும் டபுள்யூஎல் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். வேல்முருகன், கடந்த 2008 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து பாடல்களின் உரிமையை எங்கள் நிறுவனம் வாங்கியுள்ளது. அதன் அடிப்படையில் பாடல்களை நாங்கள் பயன்படுத்தினோம் என்று விளக்கமளித்தார். இந்த நிலையயில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பு அறிவிக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

