திருச்சி செல்லும் தவெக தலைவர் விஜய்.. நாளை வேட்புமனு தாக்கல்.. உடனே பிரசாரம்.. போலீசார் அனுமதி!
Tvk Leader Vijay Campaign : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாளை ஏப்ரல் 2- ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரம் மேற்கொள்வதற்காக மாநகர காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது.

திருச்சியில் பிரசாரம் மேற்கொள்ள விஜய்க்கு அனுமதி
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30- ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக, பெரம்பூரில் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். 5 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த விஜய் கடைசி நேரத்தில் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. அந்த தொகுதியில் போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்யாத காரணத்தால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக அந்த கட்சியினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி
இந்த நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாளை ஏப்ரல் 2-ஆம் தேதி ( வியாழக்கிழமை) விஜய் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதை தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கி காவல்துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க: திமுக தூண்டுதலால் என் மீது பாலியல் புகார்… அந்த பெண் அக்கா மாதிரி…பூந்தமல்லி தவெக வேட்பாளர் பரபரப்பு பேட்டி!
தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவுக்கு காரணம்
அப்போது, திருச்சி மாவட்டத்தில் மற்ற தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தவெக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். கொளத்தூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் 30 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை திரட்டியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு பதிவு காண விளக்கத்தை அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பொறுப்பு டிஜிபிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
அரசியல் கட்சியினருக்கு ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள்
மேலும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினருக்கு ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதியை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில், திருச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கு மாநகர காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. கரூரில் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவரது கூட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதுடன் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட காரணம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது!