தேர்தலில் பண நாயகம் ஆழ குழுி தோண்டி புதைக்கப்பட்டது.. தவெக தலைவர் விஜய்!
TVK leader Vijay : தமிழக சட்டமன்ற தேர்தலில் பண நாயகம் தோல்வி அடைந்ததுடன், ஆழமான குழி தோண்டி புதைக்கப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார். தனது கட்சிக்கு வாக்கு செலுத்திய வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பணநாயகம் ஆழ குழி தோண்டி புதைக்கப்பட்டது
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்தது முதல் நம்மை ஏளனமாக பார்த்தவர்களும், பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது சாதாரணது தான் என்று நாம் அதை கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும், விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும், அவதூறுகளுமே நமக்கு பரிசாக அளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றி கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள் நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கி பிடித்து வருகின்றனர்.
இது ஒரு அதிசய சட்டமன்ற தேர்தல்
அந்த தாய் அன்போடு தான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அன்பால் வழி நடத்திய குழந்தை செல்வங்கள் தான். அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் அல்ல. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும் தான்.
மேலும் படிக்க: ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கோரிய விஜய் – கே.சி வேனுகோபால்
பண நாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது
அதனால் தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழி தோண்டி புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே ஆழமான உண்மை ஆகும். எந்தக் காலத்திலும் நிகழவே நிகழாது என்று இருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் இந்த வேளையில், நம் கட்சியின் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர் வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் படிக்க: விஜய் அமைச்சரவையில் யார்.. யார்.. இடம் பெறுவார்? தவெக பதவியேற்பு விழா எப்போது!