அதிமுகவில் இருந்து விலகும் தங்கமணி.. முன்னாள் அமைச்சர் கொடுத்த விளக்கம்..
ADMK VS DMK: 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது, அந்த வகையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி விலகி திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 14, 2025: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆல் தொடங்கப்பட்ட அதிமுகவில் இருந்த இரண்டு முக்கிய புள்ளிகள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுகவிலிருந்து விலகி விரைவில் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க கூடிய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் 2025 ஜூலை மாதம் அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகி திமுகவில் இணைந்தார். எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி என தன் அரசியல் வாழ்க்கை தொடங்கியதிலிருந்து அதிமுகவிலிருந்த இவர் திமுகவில் இணைந்தது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் திமுக தலைவர், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அடுத்தடுத்து இரண்டு முக்கிய நபர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தது பெரும் விவாதத்துக்கு உள்ளான விஷயமாக மாறி உள்ளது.
இரண்டு அணிகளாக இருந்த அதிமுக:
அதிமுக இரண்டாக பிரிந்த போது அதாவது எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்ட போது எடப்பாடி பழனிசாமிக்கு பக்கபலமாக இருந்தது இரண்டு பேர். வேலுமணி மற்றும் தங்கமணி. இந்த இரண்டு பேர் தான் அனைத்து விஷயங்களிலும் முன்னிலையில் இருந்தனர். பின்னர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இவர்கள் முக்கிய பங்காற்றினார்கள்.
மேலும் படிக்க: 207 அரசு பள்ளிகள் மூடல்.. பதிலளிக்குமா பள்ளி கல்வித்துறை – எடப்பாடி பழனிசாமி கேள்வி..
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் எஸ்.பி வேலுமணிக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த தேர்தலை சந்திக்க உள்ளது. மீண்டும் இந்த கூட்டணி அமைந்ததில் அதிமுகவினருக்கு இடையே கடும் அதிருப்தி நிலவி வருவதாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தங்கமணி அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய போவதாக கூறப்பட்டது.
அதிமுகவில் இருந்து விலகும் தங்கமணி?
ஆனால் இதற்கு தங்கமணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ நான் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாகவும் திமுகவிலிருந்து எனக்கு அழைப்பு வந்ததாகவும் செய்திகளை கேட்டவுடன் மிகவும் வருத்தம் அடைந்தேன். நான் கடந்து வந்த அரசியல் பயணத்தில் எம்ஜிஆர் அம்மா மற்றும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி என மூவரும் என் இதயத்தில் என்றும் நீக்கமற நிறைந்துள்ளனர்.
மேலும் படிக்க: தொடர் விடுமுறை.. எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம்… பயணிகள் பெரும் அவதி!
அண்ணன் எடப்பாடி பழனிசாமி எனது உறவினர் என்பதையும் தாண்டி எங்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் உயிரை விட மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவன். அப்படிப்பட்ட என்னை பற்றி இப்படி ஒரு செய்தி வந்ததை எண்ணி மிகவும் மன வேதனைப்படுகிறேன். என் இறுதி மூச்சு உள்ளவரை அதிமுக இயக்கம் தான் என் உயிர் மூச்சு. மூச்சு நின்றதற்கு பிறகு எனது உடலில் அதிமுக கொடி போர்த்தி தான் இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்