இன்று தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் விஜய்.. நாளை 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல்?
Tamilnadu Assembly Election: வேட்பாளர் அறிமுகத்தைத் தொடர்ந்து, நாளை (மார்ச் 30) ஒரே நாளில் தவெக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் நாளை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.
Tamilnadu polls 2026: 234 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை விஜய் இன்று அறிமுகம் செய்கிறார். தொடர்ந்து, வேட்பாளர்கள் ஒரே நாளில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 30) தொடங்க உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. அதிமுகவின் முதல் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். பாமக தலைவர் ராமதாஸ்-அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா ஆகியோர் தலைமையிலான கூட்டணியில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
இதையும் படிக்க : வரும் தேர்தலில் திமுக மண்ணை கவ்வப்போவது உறுதி – த.வெ.க தலைவர் விஜய்..




தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு:
இதற்கிடையே, சட்டசபை தேர்தலை சந்திக்க தவெக தீவிரமாகியுள்ளது. 234 தொகுதிகளிலும் தவெக தனித்து களம் காண்கிறது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இன்று அறிவிக்க உள்ளார். இதற்கான கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்க உள்ளது. இதில், தமிழகத்தில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள், புதுச்சேரியில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்து, பேசுகிறார்.
ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்:
வேட்பாளர் அறிமுகத்தைத் தொடர்ந்து, நாளை (மார்ச் 30) ஒரே நாளில் தவெக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் நாளை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.
பிரச்சாரம் தொடக்கம்:
நேற்று முன்னினம் பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களினால் தவெக சார்பில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. குறுகலான சாலை அதிக மக்கள் கூட முடியாத பகுதி என பல காரணங்கள் கூறப்பட்டது. இதற்கிடையே, தவெக சார்பில் புதிய பிரச்சார இடம் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் விஜய் திங்கட்கிழமை பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்க: திமுக – கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்ன? வெளியான பட்டியல்..
விஜய்க்கும்-திமுகவுக்கும் போட்டி:
விஜய் போட்டியிட உள்ள பெரம்பூர் தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் திமுக நேரடியாக களம் காண்கிறது. எனவே விஜய்க்கும்-திமுகவுக்கும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் விஜய்யைத் தவிர, தியாகராயநகரில் புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, ஆயிரம் விளக்கில் ஜேசிடி பிரபாகர், ஆர்.கே.நகரில் மரியவில்சன், மயிலாப்பூரில் வெங்கட்ராமன் ஆகியோர் களம் காண இருக்கின்றனர். தற்போது இந்த தொகுதிகளில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.