AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட கருணாநிதி?”.. ஆ.ராசா ஆடியோ விவகாரத்தை கையில் எடுத்த இபிஎஸ்.. அதிமுக ஆட்சியில் செக்!

Tamilnadu Assembly Election: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாரா என்பது குறித்துச் சட்ட ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், அதில் உண்மை இருக்கும் பட்சத்தில், தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இபிஎஸ் உறுதியளித்தார்.

“வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட கருணாநிதி?”.. ஆ.ராசா ஆடியோ விவகாரத்தை கையில் எடுத்த இபிஎஸ்.. அதிமுக ஆட்சியில் செக்!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 05 Apr 2026 09:39 AM IST

Tamilnadu Polls 2026: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் தேர்தல் பரப்புரையில் ஈடுட்டார். அப்போது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசாவின் ஆடியோ விவகாரத்தைக் கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி நாட்களைப் பற்றிப் பல கேள்விகளை எழுப்பினார். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சரியாக 17 நாட்களே இருப்பதால், தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத உச்சக்கட்ட பரபரப்பை சந்தித்து வருகிறது. இப்படி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆ.ராசா பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் கசிந்து பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இதையும் படிக்க: “திருமாவளவன் துணை முதல்வர் பதவி கேட்கத் திட்டம்”.. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!!

ஆ. ராசாவின் ஆடியோ விவகாரம்:

அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் தனது பிரச்சாரத்தின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைச் சுட்டிக்காட்டினார்.  கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவரை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாகத் ஆ.ராசா அந்த ஆடியோவில் குறிப்பிட்டார். இந்த ஆடியோ செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரவி வருவதாகவும், தனது தந்தையே சிறையில் வைப்பது நியாயமா? எனவும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க. அழகிரியின் குற்றச்சாட்டு:

அதோடு, ஆ.ராசா மட்டுமின்றி, கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரியும் முன்பு தனது தந்தையை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்ததை நினைவுகூர்ந்த இபிஎஸ், ஒரு தந்தையாக, மகனை எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் எனப் பல பதவிகளுக்கு உயர்த்திய கருணாநிதியையே ஸ்டாலின் வீட்டுச் சிறையில் வைத்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய விசாரணை:

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, ஜெயலலிதாவின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டிய இபிஎஸ், அதே பாணியில், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாரா என்பது குறித்துச் சட்ட ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார் . மேலும், அதில் உண்மை இருக்கும் பட்சத்தில், தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக வாக்குறுதி அளித்தார்.

இதையும் படிக்க: வேட்பு மனுவில் குளறுபடி… பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்!

என் மீது கோபத்தை காட்டாதீர்கள்:

தன் மீது கோபப்படுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று ஸ்டாலினுக்குப் பதிலளித்த ஈபிஎஸ், “ஸ்டாலின் அவர்களே, உங்கள் கோபத்தை என் மீது காட்டாதீர்கள்; அந்த ஆடியோவில் பேசிய உங்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது காட்டுங்கள். அவர்தான் உண்மையைச் சொன்னவர்” என்று சாடினார். மேலும், ஸ்டாலின் காட்டும் கோபத்தைப் பார்க்கும்போது, அந்தச் சம்பவம் உண்மையிலேயே நடந்திருக்குமோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆ. ராசாவின் விளக்கம்:

இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது குரலில் பரவி வரும் ஆடியோ போலியானது என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்டுள்ள இரண்டு ஆடியோக்களும் முற்றிலும் உண்மையானவை அல்ல. அவை பல்வேறு காலகட்டங்களில் பேசிய உரையாடல்களைத் துண்டு துண்டாக வெட்டி, முன்னும் பின்னும் மாற்றி இணைக்கப்பட்ட ஒரு “தொகுக்கப்பட்ட வடிவம்”ஆகும். சில இடங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நான் பேசாத விஷயங்களை எனது குரலில் இருப்பது போல் சித்தரித்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் திமுக தலைமைக்கும், தனக்கும் அவப்பெயர் உண்டாக்கும் நோக்கோடும், மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்தோடும் இந்தச் சதிச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த அவதூறு பரப்பும் செயலுக்காக மாரிதாஸ் மீது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us