அதிமுக – பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்.. மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை கருத்து..

Congress Leader Selvaperunthagai: அதிமுகவின் உட்கட்சி விவகாரம் வெளியே வந்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ” அதிமுக–பாஜக கூட்டணி என்பது மூழ்கும் கப்பல். அதில் ஏறினால் மூழ்கிவிடுவோம் என்பதால், ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பாஜக–அதிமுக கூட்டணியை ஏற்க மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்.. மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - செல்வப்பெருந்தகை கருத்து..

செல்வப்பெருந்தகை

Published: 

05 Sep 2025 16:12 PM

 IST

அதிமுக, செப்டம்பர் 5, 2025: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் உட்கட்சி விவகாரம் வெளிப்படையாகி வருகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், அந்தத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அதிமுக–பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. ஆனால் அந்தத் தேர்தலில், இரு கட்சிகளும் ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் அதிமுக–பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்தது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளன. ஆனால், இந்தக் கூட்டணி அமைந்ததிலிருந்தே அதிமுகவினர் சிலருக்கு அதிருப்தி மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கோரிக்கை:

அந்த வகையில், செப்டம்பர் 5, 2025 அன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “ 2024 தேர்தலுக்கு பிறகு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கழகம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் எனச் சொன்னேன். ஆனால் அப்போது அவர் கேட்கும் மனநிலையிலே இல்லை. இப்போது ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் – மறப்போம் மன்னிப்போம்.

மேலும் படிக்க: ‘ஒன்றுபடுவோம்… வெற்றி நிச்சயம்’ செங்கோட்டையன் பேச்சுக்கு சசிகலா, ஓபிஎஸ் பதில்!

வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் திரும்ப வர, எந்த வித நிபந்தனையும் விதிக்கக்கூடாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற, வெளியே சென்றவர்களை கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அதிமுக – பாஜக கூட்டணி – மூழ்கும் கப்பல்:

செங்கோட்டையன் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, சென்னை சத்தியமூர்த்தி பவனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “பாஜக–அதிமுக கூட்டணி மக்கள் கெடு கொடுத்துள்ளது. இதைக் கண்டு டிடிவி தினகரன் வெளியேறிவிட்டார்; ஓ.பி.எஸ். வெளியேறிவிட்டார். இன்னும் யார் யார் வெளியேறப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிமுக–பாஜக கூட்டணி என்பது மூழ்கும் கப்பல்.

மேலும் படிக்க: மறப்போம்.. மன்னிப்போம்.. ஒன்றுபட்ட அதிமுக தேவை.. செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

அதில் ஏறினால் மூழ்கிவிடுவோம் என்பதால், ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பாஜக–அதிமுக கூட்டணியை ஏற்க மாட்டார்கள். இதை உணர்ந்ததால் தினகரனும், ஓ.பி.எஸ்.யும் வெளியேறினர். இன்று செங்கோட்டையனும் அதையே வெளிப்படையாகச் சொல்கிறார். எனவே, இந்த கூட்டணியில் ஏறவும் வேண்டாம், இறங்கவும் வேண்டாம் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்” என்றார்.

உறவாடிக் கெடுக்கும் கட்சிதான் பாஜக:

மேலும் அவர், “உறவாடிக் கெடுக்கும் கட்சிதான் பாஜக. இதற்கான பல சம்பவங்கள் உதாரணமாக இருக்கின்றன. எல்லா மாநிலங்களிலும் சித்து விளையாட்டை நடத்தி வந்துள்ளனர். இப்போது உச்சபட்சமாக அதிமுகவிலேயே விளையாட ஆரம்பித்துவிட்டனர். எனவே அதிமுகவினர் விழித்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.