தேமுதிக கனவு நிறைவேறியது… நாடாளுமன்றம் செல்லும் கட்சியின் முதல் எம்.பி.. யார் இந்த எல்.கே.சுதீஷ்!
DMDK Rajya Sabha Candidate: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் அந்தக் கட்சியை சேர்ந்த எல். கே. சுதீஷ் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை அவர் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

தேமுதிகவின் ராஜ்ய சபா வேட்பாளர் வேட்பாளர் எல்.கே.சுதீஷ்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக, அந்த கூட்டணியில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் முதல் முறையாக இணைந்தது. அப்போது, தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் இடமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அதற்கான பட்டியலையும் திமுக தலைமையிடம் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடுத்திருந்தார். அதன்படி, திமுக கூட்டணியில் முதல் முறையாக இணைந்துள்ள தேமுதிகவை குஷி படுத்துவதற்காக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை திமுக தலைமை ஒதுக்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் எல். கே. சுதீஷ் போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, அவர் தனது வேட்பு மனுவை இன்று வியாழக்கிழமை ( மார்ச் 5) தாக்கல் செய்ய உள்ளார்.
தேமுதிக அரசியல் பயணத்தில் முதல் எம்.பி.
இதன் மூலம், கடந்த 21 ஆண்டு கால தேமுதிக அரசியல் பயணத்தில் முதல் முறையாக அந்த கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவுடன் ஒரு எம்பி கிடைக்க உள்ளார். கடந்த 2005- ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார். கட்சி ஆரம்பித்த 6 ஆண்டுகளில் எதிர்க்கட்சி அந்தஸ்தை விஜயகாந்த் பெற்றிருந்தார். இதை தொடர்ந்து, 2013- ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த கட்சியின் பொருளாளர் ஏ. ஆர். இளங்கோவன் தோல்வி அடைந்தார். இதன் பிறகு தேமுதிகவுக்கு சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: கூட்டணி வாசல் கதவு திறந்திருந்தும் வராத கட்சிகள்… தனித்து விடப்படுகிறதா தவெக.. என்ன செய்யப்போகிறார் விஜய்!
எட்டாத கனியாக இருந்த எம்.பி. பதவி
இதனால், தேமுதிகவை சேர்ந்தவர்கள் சட்டமன்றம் சென்றிருந்த நிலையில், அவர்களால் நாடாளுமன்றம் செல்ல முடியவில்லை. இதனிடையே, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனால், கட்சி தொடங்கி 21 ஆண்டுகள் ஆன பின்னரும் எம்பி பதவி என்பது எட்டாத கனியாகவே தேமுதிகவுக்கு இருந்தது. இந்த நிலையில் தான், திமுக ஆதரவுடன் எல். கே. சதீஷ் எம்பி ஆக உள்ளார்.
யார் இந்த எல் கே சதீஷ்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் எல். கே. சுதீஷ். சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்த இவர், விஜயகாந்த் நடித்த படங்களை தயாரித்துள்ளார். பின்னர் விஜயகாந்த் அரசியலில் இறங்கியபோது, அவருக்கு பக்கபலமாக எல்கே சுதீஷ் செயல்பட்டு வந்தார். 2006 சட்டமன்ற தேர்தலில் குடியாத்தம் தொகுதி, 2009 மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதி, 2014 மக்களவைத் தேர்தலில் சேலம் ஆகிய தொகுதிகளில் எல். கே. சுதீஷ் போட்டியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2017- இல் தேமுதிக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2019- ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். தற்போது தேமுதிக பொருளாளராக இருந்து வருகிறார்.
மேலும் படிக்க: ராஜ்ய சபா தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்!