அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!
Tamil Nadu Assembly Elections: தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்வதற்கான வாகனங்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வாகனங்களில் பல்வேறு பிரத்யேகமான அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேர்தல் பிரசார வாகனங்கள் தயார் செய்யும பணி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளது. அடுத்த மாதம் மார்ச் முதல் வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும், ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, இறுதியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு 234 சட்டமன்ற தொகுதிகளில் 12, 582 ஊராட்சிகள் மற்றும் 16 ஆயிரம் கிராமங்களில் கட்சிகளின் தலைவர்கள், கட்சியின் தலைமை கழக பேச்சாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர், சினிமா துறையைச் சேர்ந்த நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இந்த பிரச்சாரம் தொடங்க உள்ளது. அதன்படி, சுமார் 30 முதல் 40 நாட்கள் இந்த பிரச்சாரம் நடைபெறும்.
பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி
இதில், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் அதிகபட்சமாக சுமார் 2 ஆயிரம் கிலோ. மீட்டர் வரை வாகனங்களில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமாகும். இவ்வாறு தொலை தூரம் சென்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளுடைய பிரச்சார வாகனம் தயார் செய்யும் பணி கோயம்புத்தூர் மாவட்டம், சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன. இதில், தயார் செய்யப்படும் பிரச்சார வாகனங்களில் அதிநவீன வசதிகள் உள்ளிட்டவை பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: முருகன் பாடல் சர்ச்சை – விஜய் மீது இந்து முன்னணி போலீஸில் புகார் – என்ன நடந்தது?
20 முதல் 40 நாள்கள் வரை…
இந்த வாகனங்களை தயார் செய்வதற்காக அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு பிரச்சார வாகனம் தயார் செய்வதற்கு குறைந்தது 20 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை ஆகும் என்பதால், தற்போதே அரசியல் கட்சிகள் சார்பில் தங்களுக்கான பிரச்சார வாகனங்களை மேற்கண்ட நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளன. இந்த வாகனங்கள் பிரிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு ஏற்றவாறு பிரத்தியாக வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
பிரசார வாகனத்தில் என்ன வசதிகள் உள்ளன
அதன்படி, வாகனத்தில் கட்சியின் தலைவர்கள் அமரும் இருக்கை, வாகனத்தின் உள்புற கட்டமைப்பு, ஹைட்ராலிக் ஏணி மூலம் வாகனத்தின் மேல் பகுதியில் உரையாற்றும் வசதி, கூட்டத்தை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிவி, இதை தவிர்த்து 3 முதல் 5 பேர் அமரும் வகையில் குஷன் இருக்கைகள், படுக்கை வசதி உள்ளிட்ட அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உணவு சமைக்கும் வசதி உள்ளிட்டவை
சில பிரச்சார வாகனங்களில் உணவு சமைப்பதற்கான வசதி, கழிவறை, வாகனத்தின் உள்ளே ஃபேக்ஸ், பிரிண்டர் வசதி மற்றும் குண்டும், குழியுமான சாலைகளில் வாகனம் செல்லும் போது குலுங்காமல் இருப்பதற்கு ஏர் சஸ்பென்ஷன் வசதி, பெண் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகைகள் பயன்படுத்துவதற்கான பிரச்சாரம் வாகனங்களில் கழிவறை, ஆடை மற்றும் பகுதி போன்ற சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: எனக்கு எதிரிகள் யாரும் இல்லை… – விஜய்யின் விமர்சனத்துக்கு முதல்வர் பதில்?