சென்னை, ஏப்ரல் 10, 2026: சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பெரம்பூர் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா, கொடுங்கையூர் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் உள்ள வியாசன் நகர் 4ஆம் எண் TASMAC கடையில் காலை 6 மணி முதலே மது விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
மேலும், அந்த TASMAC கடைக்கு அருகில் உள்ள KGF பாரில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் கடை:
தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதி மக்கள் கூறுகையில், அந்த TASMAC கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினர்.
மேலும் படிக்க: “நாங்களும் விஜய் ரசிகர்கள்தான்”.. ஆனால் அவர்.. பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர்..
திலகபாமா கொடுத்த புகார்:
பாமக வேட்பாளர் திலகபாமாவின் புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான காவல்துறையினர் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, உள்பக்க அறையை திறக்காமல் TASMAC ஊழியர்கள் மறுத்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், சம்பந்தப்பட்ட TASMAC ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீசாரின் வலியுறுத்தலின் பேரில், ஊழியர்கள் கடையை திறந்தனர்.
மேலும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகம் வரும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி.. பயணத்திட்டம் என்ன?
அரசு விதித்த நேரப்படி மதுபானக் கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால், அந்த கடை விடியற்காலை 6 மணிக்கே திறந்து, தொடர்ந்து மது விற்பனை செய்யப்பட்டு வந்தது குறித்து திலகபாமா கேள்வி எழுப்பினார். இதை காவல்துறை ஏன் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின் திலகபாமா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மேலும், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் அனைத்தும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், அப்பகுதி மக்கள் இந்த நடவடிக்கையை பாராட்டினர்.