Seeman: வேடிக்கை காட்டும் சிங்கம்.. விஜயை கடுமையாக விமர்சித்த சீமான்!

TVK Vijay: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் தேர்தல் பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். உண்மையான மக்கள் சந்திப்பு என்பது நேரடி தொடர்புதான் என வலியுறுத்திய சீமான், விஜயின் ரோடு ஷோக்களை மக்கள் சந்திப்பாகக் கருதக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

Seeman: வேடிக்கை காட்டும் சிங்கம்.. விஜயை கடுமையாக விமர்சித்த சீமான்!

சீமான் - விஜய்

Published: 

11 Sep 2025 16:33 PM

 IST

மதுரை,செப்டம்பர் 11: உண்மையான மக்கள் சந்திப்பு என்பது மக்கள் பிரச்சனைக்காக அவர்களுடன் நேரடியாக களத்திற்கு சென்று நிற்பது தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் இந்த கருத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்பான கேள்வியின் போது தெரிவித்தார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான்,  “இப்ப நான் மக்களை சந்திக்கிறேன். அதுதான் மக்கள் சந்திப்பு. மக்களுடைய எந்த போராட்டத்தில் நான் பங்கேற்காமல் இருந்துள்ளேன் சொல்லுங்கள் பார்க்கலாம். மக்களுக்காக நிற்பவன் தான் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்தவன். அப்படிப்பட்ட நிலையில் மக்களை சந்திப்பது என்பது ரோடு ஷோ, கூட்டு ஷோ என்பது கிடையாது.

மக்களை கூட்டி வைத்து பேசிவிட்டு செல்வதும், காரில் செல்லும்போது கைகாட்டி விட்டு செல்வதும் கிடையாது.  நட்சத்திர பிரபலம் என்றால் வாக்கு கேட்கவும் இப்படித்தான் வருவீர்களா?. இதனை மக்கள் சந்திப்பு என சொல்லக்கூடாது. என்னை பார்க்க மக்கள் வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆகவே இது வேட்டையாட வரும் சிங்கம் இல்லை. வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என விஜய்யை கடுமையாக சாடினார்.

Also Read:  வாக்குறுதிகளை மக்கள் மறக்க மாட்டாங்க – சீமான் பேச்சு

விஜய்யின் தேர்தல் சுற்றுப்பயணம்

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளார்.

அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2025 செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:  பெருங்காய டப்பா போல் காலி ஆகிவிடுவார் விஜய்.. அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்!

இப்படியான நிலையில் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தகவல் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அரசியல் கட்சி தலைவர்கள் அவர் வார இறுதி நாட்களில் பரப்புரை மேற்கொள்வதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.