தவெக தலைவர் விஜய் மீது வழக்கு… தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்பு!

Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தின் போது, தேர்தல் விதிகளை மீறியதா போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இரு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் மீது வழக்கு... தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்பு!

விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய காரணம் என்ன

Published: 

31 Mar 2026 14:34 PM

 IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தனக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, பெரம்பூரில் பிரச்சாரம் செய்த பின்னர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவரை பார்ப்பதற்கும், அவரது பேச்சை கேட்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதில், சிலர் சாலை தடுப்புகளை தாண்டி குதித்ததால், மக்கள் கூட்டத்திலிருந்து சுமார் 500 மீட்டர் இடைவேளையில் விஜயின் பிரசார வாகனம் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜய் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில், இந்த பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு

போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் விஜயின் பிரச்சாரத்திற்கு 5 ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதாகவும், 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்களை திரட்டியதாகவும், பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் பாதையை மறைத்ததாகவும் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி ஆகியோர் தனித்தனியே அளித்த புகாரின் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ததாக கூறப்பட்டது.

மேலும் படிக்க: அடேங்கப்பா! தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? வெளியான தகவல்

தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிய காரணம்

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததற்கான காரணத்தை தெரிவிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கொளத்தூர் தொகுதியில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும், இந்த பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது எந்த சூழலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து டிஜிபியிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் ஆணையத்தில் தவெக தரப்பில் புகார்

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வில்லிவாக்கம் தொகுதியில் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்காத காரணத்தால் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனவும், போலீசார் பாரபட்சம் பார்ப்பதாகவும் தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு இந்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நெல்லை தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்!!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..