2026 தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதி…மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம்!
Marxist State Secretary Shanmugam: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி மேலும் உறுதி செய்யப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார். திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திமுக கூட்டணி வெற்றி உறுதி
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கிய வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமாக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனவரி 6- ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முன் தேதியிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது வரவேற்கத்தக்கது. இதற்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. கடந்த 2003- ஆம் ஆண்டு முதல் 2025- ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற நபர்களுக்கு கருணை சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மற்ற அரசு பணியாளர்களின் கோரிக்கை
இதேபோல, அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், சாலை பணியாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பல்வேறு துறைகளில் ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டை தமிழக அரசு களைய வேண்டும். தமிழகத்துக்கான நிதி பங்கீட்டை மத்திய அரசு வழங்குவதில்லை. பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஜி. எஸ். டி. யில் தமிழகத்துக்கான பங்கு வழங்கப்படுவதில்லை. இது போன்ற பல்வேறு பாரபட்சமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க: திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்கும் செயலி…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்!
திமுக கூட்டணியின் வெற்றி உறுதி
இந்த சூழ்நிலையில் கடன் சுமைக்கு மத்தியில் தமிழக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சத்துணவு அங்கன்வாடியில் பணிபுரிந்தவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டதன் மூலமாக திமுக கூட்டணியின் வெற்றி மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் ஒரே கூட்டணி திமுக கூட்டணி தான்.
கடந்த அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன்
அதிமுக பாஜக கூட்டணியில் புதிதாக எந்த கட்சியும் இணையவில்லை. தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஆபர் வழங்கியிருந்தாலும், அந்த கட்சியில் எந்த கட்சியும் இணையவில்லை. திமுகவின் வாக்குறுதியை ஆட்சி முடியும் நேரத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறுவது முறையல்ல. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 5 லட்சம் கோடி கடன் இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் ரூ. 4.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இது நலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுக்காக வாங்கப்பட்டதாகும். அனைத்து மாநில அரசுகளும் கடன் வாங்குவதைப் போல, தமிழக அரசும் கடன் வாங்கி உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு…செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுகவினர் போர்க்கொடி!