நான் ஏன் பதவி விலக வேண்டும்? எந்த அவசியமும் இல்லை – நயினார் நாகேந்திரன்

BJP Leader Nainar Nagendran: மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “ நான் ஏன் பதவி விலக வேண்டும்? ஜே.பி. நட்டாவும் அமித்ஷாவும் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனக்கு பதவி விலக வேண்டிய அவசியமே இல்லை” என தெரிவித்துள்ளார்.

நான் ஏன் பதவி விலக வேண்டும்? எந்த அவசியமும் இல்லை - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated On: 

11 Sep 2025 12:46 PM

 IST

மதுரை, செப்டம்பர் 11, 2025: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் பதவி விலகப் போவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி. நான் ஏன் பதவி விலக வேண்டும்? நட்டாவும் அமித்ஷாவும் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே நான் பதவி விலக வேண்டிய அவசியமே இல்லை” என தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில் அதிமுக–பாஜக கூட்டணியிலேயே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குறிப்பாக அதிமுக கட்சியில் உட்கட்சி விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், “முதல்வர் வேட்பாளரை மாற்றினால் ஆதரவு தரத் தயாராக உள்ளோம்” என தெரிவித்திருந்தார்.

மற்றொரு பக்கம், அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கினர். இதுபோன்ற சூழலில் பாஜக–அதிமுக கூட்டணியிலேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கூட்டணியில் சலசலப்பு.. திடீரென டெல்லி விரையும் நயினார் நாகேந்திரன்.. முக்கிய தலைவர்களுடன் மீட்டிங்!

செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது பெரிய விஷயம் இல்லை:

இந்நிலையில் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்துறை அமைச்சரைக் சந்தித்தது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அது சாதாரணமான ஒன்று தான். அதனை பெரிதுபடுத்த தேவையில்லை. மேலும், அவர்களின் சந்திப்பு குறித்து என்ன நடந்தது என்பது பற்றி முழுமையாக எனக்கு தெரியாது.

அதிமுக வலுவாக தான் உள்ளது:

செங்கோட்டையன் அமைச்சரைக் சந்தித்தாலும் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை. கூட்டணி எப்போதும் போல இயல்பாகத்தான் உள்ளது. அதிமுகவை உடைக்க வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் அல்ல; அத்தகைய அவசியமும் பாஜகவிற்கு கிடையாது. அதிமுக தற்போதும் வலுவாகத்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் மிகப்பெரிய ஆரவாரம் செய்கின்றனர்.

மேலும் படிக்க: ’அதிமுக ஆட்சிக்கு வராது.. உதயநிதி சொன்னது உண்மை தான்’ டிடிவி தினகரன் பேட்டி

அதை கண்டு திமுக பொறாமையில் இப்படிப் பேச்சுகளை வெளியிடுகிறது. எங்கள் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்; அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். அவர் சொல்வதே இறுதியான முடிவு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் மீண்டும் வருவது தொடர்பாக நான் இருவரிடமும் பேசத் தயாராக இருக்கிறேன்.” என கூறினார்.

நான் ஏன் பதவி விலக வேண்டும்?

அதேபோல், “பாஜக மேற்கொள்ளும் அறுவை சிகிச்சையால் அதிமுக ‘ICU’-க்கு செல்லும்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு யார் ICU-க்கு செல்கிறார்கள் என்பதை அனைவரும் பார்ப்பார்கள். நான் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

நான் ஏன் பதவி விலக வேண்டும்? ஜே.பி. நட்டாவும் அமித்ஷாவும் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனக்கு பதவி விலக வேண்டிய அவசியமே இல்லை. இனி இத்தகைய வதந்திகளை பரப்ப வேண்டாம்.” எனக் கூறினார்.

தொடர்ந்து அவர், “திமுக வலுவாக இருக்கிறது என்று, அல்லது அவர்கள் 40% வாக்கு வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எங்கும் கூறவில்லை. இதனை உதயநிதி ஸ்டாலின் தான் கூறியிருக்கிறார். இதனைத் தவறாகப் புரிந்து பரப்பப்படுகிறது.” எனவும் தெரிவித்தார்.