சென்னை, ஏப்ரல் 4, 2026: தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை என்பது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியானன. அதாவது, பாஜக மேலிடம் அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியை கேட்டதாகவும் கூறப்படுகிறது. கோவை வடக்கு தொகுதியில் ஏற்கனவே வானதி ஸ்ரீநிவாசன் போட்டியிடும் நிலையில், மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டபோது அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இருந்தபோதிலும், அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன் என தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பாஜக மையக்குழு கூட்டம்:
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இதில் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பொறுப்பாளர்கள், மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொள்கிறார்.
தேர்தலில் ஏன் போட்டியில்லை – அண்ணாமலை விளக்கம்:
இதனைத் தொடர்ந்து, இந்த தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக பாஜக என் பெயரை பரிந்துரைக்கவில்லை.
தமிழக பாஜக பரிந்துரைக்காத நிலையில், தேசிய தலைமையினர் எவ்வாறு என் பெயரை அறிவிப்பார்கள்? சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என நான் ஏற்கனவே கட்சி தலைமையிடம் தெரிவித்திருந்தேன். கட்சி கூறியதை ஏற்று, தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய உள்ளேன். தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை மே 4ஆம் தேதிக்கு பிறகு தெரிவிக்கிறேன்” என கூறினார்.
மேலும் படிக்க: 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டா சசிகலா.. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம்..
கடந்த ஆண்டு, அமித் ஷா தமிழகத்திற்கு வந்தபோது, பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, நைனார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அண்ணாமலைக்கு மத்திய அளவில் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அவரது சேவை தமிழகத்தில் மட்டும் இல்லாமல் தேசிய அளவிலும் பயன்படுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதுவரை அவருக்கு தேசிய அளவில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், தேர்தலிலும் அவரது பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.