பி.எல். சந்தோஷ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்.. கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை..
BJP Meeting: 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக ஆயத்தமாகி வரும் நிலையில், ஆகஸ்ட் 10, 2025 தேதியான இன்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சென்னை, ஆகஸ்ட் 10, 2025: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழகத்தில் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஏழு மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் பாமக மற்றும் தேமுதிக என அனைத்து கட்சிகள் தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பாஜகவை பொறுத்த வரையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒன்றாக தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றாக தேர்தலை சந்தித்தது. அதில் பாஜகவிற்கு நான்கு இடங்கள் கிடைத்தது. 2021 சட்டமன்ற தேர்தல் மூலம் பாஜக 15 ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. அந்த வகையில் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூடுதல் இடங்கள் வெற்றி பெற்று பலம் வாய்ந்த கட்சி ஆக தமிழகத்தில் திகழ வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதிமுக பாஜக கூட்டணி:
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உடைந்து தனித்தனியாக தேர்தலை சந்தித்தனர். அதனை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்த போது மீண்டும் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என தெளிவுபடுத்தப்பட்டது. இருப்பினும் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் தனித்தனியாக அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: மீண்டும் கூட்டணியா? ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க பாஜக திட்டம்.. இன்று முக்கிய மீட்டிங்!
அதிமுக தரப்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் பாஜக தரப்பில் ஆகஸ்ட் 17 2025 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு அதாவது 2026 ஜனவரி மாதம் வரை மாவட்டம் தோறும் மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது சுற்றுப்பயணத்தையும் தொடங்கியுள்ளார்.
தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் கூட்டம்:
இப்படிப்பட்ட சூழலில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ் 9 ஆகஸ்ட் 2025 அன்று தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 10 2025 தேதி ஆன இன்று பாஜக தலைமை அலுவலகமான கமலாளயத்தில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: பாஜக கூட்டணியில் தவெக இணையுமா? பி.எல். சந்தோஷ் சொன்ன விஷயம்.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்!
இதில் முக்கியமாக பாஜகவுடன் பிற கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் விளக்குவதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் விலகியது ஏன் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் கூட்டணி முடிவுகள் குறித்து முடிவாகாத நிலையில் அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில் இணையுமா என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா?
முக்கியமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், கூட்டணி குறித்து 2026, ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிவிடுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டங்களை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி ஏஜென்ட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.