தலைவர் விஜயின் தேர்தல் சுற்றுப்பயணம்.. மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவுகள்..
TVK Vijay Tour: தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான பெரியார் பிறந்த நாளான 2025 செப்டம்பர் 17 ஆம் தேதி, ஈரோட்டில் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளரை நியமனம் செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 31, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளரை நியமனம் செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஏழு மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், அதற்கான பணிகள் அரசியல் கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுகவைப் பொருத்தவரையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் 2025 ஜூன் மாதம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதில் இதுவரை 118 சட்டமன்றத் தொகுதிகளில் அவர் மக்களை சந்தித்துள்ளார்.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:
அதைப் போல ஆளும் திமுக அரசு தரப்பில் “ஒரணியில் தமிழ்நாடு உங்களுடன் ஸ்டாலின்” போன்ற திட்டங்கள் மூலம் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முக்கோண போட்டி நிலவி வருகிறது. இதில் தேமுதிக மற்றும் பாமக தரப்பில் இதுவரை எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
Also Read: முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி.. வாக்குறுதி நிறைவேற்ற தவறிவிட்டார் – பிரேமலதா விஜயகாந்த்
தலைவர் விஜய்யின் தேர்தல் சுற்றுப்பயணம்:
தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் மதுரையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து மக்களை சந்திக்க தலைவர் விஜய் பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான பெரியார் பிறந்த நாளான 2025 செப்டம்பர் 17 ஆம் தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்களுக்கு புதிய பொறுப்புகள்:
இதற்காக பல தரப்பு ஆலோசனைக் கூட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்குள் 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் நியமனம் செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read: அமெரிக்காவின் 50% வரி விதிப்பு.. வேலை இழக்கும் அபாயம்.. 11 கோரிக்கைகள் முன்வைத்த தலைவர் விஜய்..
ஏற்கனவே ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் இருந்த நிலையில், இப்போது தொகுதி-வாக்குச்சாவடி அடிப்படையில் ஒன்றிய செயலாளர் பதவியை பிரிக்கக் கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், வீடு வீடாக சென்று தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், மக்களின் பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டு, பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் என்றும், தொகுதி ரீதியாக இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் கேட்டறிந்து அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.