‘அதிமுகவுக்கு தான் ஓட்டு கேட்பேன்.. எனக்கு வேற ஆசையில்ல’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!
O Panneerselvam On AIADMK : 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்காக தான் வாக்கு கேட்பேன் எனவும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கென்று தனி ஆசை, இலக்கு எதுவும் இல்லை எனவும் பேசியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
சேலம், ஆகஸ்ட் 27 : 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு (AIADMK) தான் வாக்கு கேட்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தனது இலக்கு என்றும் தனக்கு என்று வேறு ஆசையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Election 2026) இன்னும் 8 மாதங்களே உள்ளன. இதனால் தேர்தல் களத்தில் சில அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. பாஜக உடன் கூட்டணியே கிடையாது என சொல்லிக் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலுக்கான பாஜகவுடன் அவர் கூட்டணி வைத்துள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்து வருகிறார்.
ஆனால் மூன்று பேரும் அதிமுகவில் இணைய முனைப்பு காட்டி வருகின்றனர். இப்படியாக அதிமுகவில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்காக தான் வாக்கு சேகரிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியது புதிய புயலை கிளப்பியுள்ளது. அதாவது, சேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது இவ்வாறு கூறியிருக்கிறார்.
Also Read : ஜகதீப் தன்கரை சிறைப்படுத்தியுள்ளதா பாஜக..? காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி!
”அதிமுகவுக்கு தான் ஓட்டு கேட்பேன்”
அவர் பேசுகையில், “என்னை பொறுத்தவரை பிரிந்துள்ள அதிமுக ஒன்று சேர வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது என்னுடை நிலைப்பாடு. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்காக தான் வாக்கு கேட்பேன். அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்பதே எனது இலக்கு. எனக்கென்று தனி இலக்கு எதுவும் இல்லை.
பிரிந்து இருக்கும் அதிமுக சேர்ந்து இருந்தால் தேர்தலை சந்தித்தால் மட்டுமே ஆட்சியில் அமர முடியும். இன்று வரை அதிமுகவில் தொண்டராக தான் இருக்கிறேன். தலைவராக இல்லை” என கூறினார். தொடர்ந்து விஜயின் மாநாடு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
Also Read : பெருங்காய டப்பா போல் காலி ஆகிவிடுவார் விஜய்.. அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்!
இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “ஒவ்வொருவரும் நாங்கள் முதல்வராக வருவோம் என ஆசைப்படுகிறார்கள். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் நாகரீகம் கருதி பேச வேண்டும். பெருந்தன்மையோடு பேச வேண்டும். விஜயின் கருத்துகள் அரசியல் ரீதியாக இல்லை. அவர்கள் பேச்சுக்களில் சில ஏற்புடையதாக இல்லை. அரசியல் ரீதியாக இருக்கின்றன கருத்தாக அவர் பேசியது இல்லை ” எனக் கூறினார்.