தென்மாவட்டம் குறி.. 4ம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த இபிஎஸ்.. திட்டம் என்ன?
Edappadi Palanisamy Campaign : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தை 2025 செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்க உள்ளார். மதுரையில் இருந்து தொடங்கும் நிலையில், 2025 செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஆகஸ்ட் 23 : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது நான்காம் கட்ட சுற்றுப்பயண திட்டத்தை (Edappadi Palanisamy Campaign) அறிவித்துள்ளார். இவரது நான்காம் கட்ட சுற்றுப்பயணம் 2025 செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்குகிறது. நான்காம் கட்ட சுற்றுப் பயணத்தில் மதுரை முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Election) இன்னும் 8 மாத காலமே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப்போட்டி நிலவ உள்ளது. இதில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுக முனைப்பு காட்டி வரும் சூழலில், ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என கட்டாயத்தில் அதிமுக வியூகம் அமைத்து வருகிறது. எனவே, தேர்தலுக்கு ஓராண்டு முன்பே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்.
ஜெயலலிதா பாணியில் கொங்கு மண்டலத்தில் இருந்து 2025 ஜூலை 7ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கினார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தில் மக்களை சந்தித்து வருகிறார். பச்சை நிற பேருந்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை எடப்பாடி பழனிசாமி 52 லட்சம் மக்களிடையே பேசி, 100 தொகுதிகளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சித்தும், ஒவ்வொரு தொகுதிக்கான பிரச்னைகளை அறிந்து, அதற்கு ஏற்ப வாக்குறுதிகளையும் அவர் கூறி வருகிறார்.
Also Read : கிருஷ்ணகிரியில் மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி.. 3 ஆம் கட்ட பிரச்சார பயணத்திட்டம் என்ன?
4ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த இபிஎஸ்
இதுவரை மூன்று கட்ட பிரச்சாரத்தை அவர் நிறைவு செய்து உள்ளார். தற்போது நான்காம் கட்ட பிரச்சாரத்திற்கு அவர் தயாராகி வருகிறார். இதற்கான அறிவிப்பையும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி 2025 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தனது நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
2025 செப்டம்பர் 1ஆம் தேதி மதுரை மாவட்ம் திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருச்சுழியிலும், 2ஆம் தேதி மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கிலும், 3ஆம் தேதி மதுரை மேற்கு, மதுரை மையம், மதுரை தெற்கு, சோழவந்தா, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டியிலும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 2025 செப்டம்பர் 5ஆம் தேதி கம்பம், போடிநாயக்கனூர், பெரியகுளம், செப்டம்பர் 6ஆம் தேதி நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டையிலும், செப்டம்பர் 7ஆம் தேதி ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, 2025 செப்டம்பர் 9ஆம் தேதி தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு பகுதியிலும், 2025 செப்டம்பர் 10ஆம் தேதி பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டையிலும் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
Also Read : கொள்கை இழந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி விமர்சனம்..
மேலும், 2025 செப்டம்பர் 11ஆம் தேதி மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், 2025 செப்டம்பர் 12ஆம் தேதி வடக்கு திருப்பூர், திருப்பூர் தெற்கு, பல்லடம், செப்டம்பர் 13ஆம் தேதி சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி ஆகிய தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.