சென்னை, மார்ச் 20, 2026: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, புதிய தமிழகம், சசிகலா மற்றும் ராமதாஸ் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு தரப்பில் வேட்பாளர் பட்டியல்களை அறிவித்துள்ள சூழலில், வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
இதில் முக்கியமாக அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி. தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், பெரம்பூர் தொகுதி மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் படிக்க: மக்கள் பணத்தை குடும்பத்துடன் கொள்ளை அடிக்கும் ஸ்டாலின் சார்… பெரம்பூரில் விஜய் காரசார பிரசாரம்
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பாமக தரப்பில் திலகபாமா, திமுக தரப்பில் ஆர்.டி. சேகர் மற்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் வெற்றி தமிழன் களமிறங்குகின்றனர். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், ஆர்.டி. சேகர் சுமார் 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பெரம்பூர் தொகுதியில் பாமகவின் திலகபாமா:
இந்த நிலையில், இந்தத் தொகுதியில் புதிதாக பாமகவின் திலகபாமா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் போட்டியிடுவதால், இந்த முறை அரசியல் களம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருக்கும் திலகபாமா, திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்தவர். அவர் தனது பள்ளிப் படிப்பை அங்கேயே முடித்தார். பின்னர், மதுரையில் உள்ள கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார். தொடக்கத்திலிருந்தே பாமகவில் செயல்பட்டு வரும் அவர், தற்போது அன்புமணி தரப்பில் கட்சியின் பொருளாளராக உள்ளார்.
தேர்தல் களம்:
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டபோது, சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் திலகபாமா வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அதேபோல், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
மேலும், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகாசி 47வது வார்டில் போட்டியிட்டார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இந்த முறை முதல் முறையாக சென்னையில், அதுவும் முக்கியமான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் திமுகவின் ஆர்.டி. சேகர் உள்ளிட்டோரை எதிர்த்து அவர் களமிறங்குகிறார். தொடர்ந்து பாமகவில் செயல்பட்டு வரும் திலகபாமா, ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார். தற்போது முதல் முறையாக சென்னையில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.