தோசைக் கடை மூலம் மும்பையை கலக்கிய தமிழர் – யார் இந்த பிரேம் கணபதி?
Dosa Success Story of Tamilian : தூத்துக்குடியைச் சேர்ந்த பிரேம் கணபதி, வெறும் ரூ.150 பணத்துடன் மும்பைக்கு வந்தவர், இன்று அவரது 'தோசா ப்ளாசா' என்ற நிறுவனத்தின் மதிப்பு ரூ.30 கோடிக்கு மேல். பல தடைகளை தாண்டி, தோசையை வைத்து தொழில் வெற்றியை அடைந்த அவரது பயணம் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் கணபதி. ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவரால் பத்தாம் வகுப்பைத் தாண்டி படிப்பைத் தொடர முடியவில்லை. இந்த நிலையில் மாதம் ரூ.250 சம்பளத்தில் சென்னைக்கு வேலைக்கா சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு கிடைத்த சொற்ப வருமானம் அவருக்கே போதவில்லை. இந்த நிலையில் மும்பையில் ரூ.1200 சம்பளத்தில் வேலை என ஒருவர் சொன்னதை நம்பி, தனது 17 வயதில் கனவுகளுடன் மும்பையை அடைந்தார். அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்திருக்கிறது. அவரிடம் அப்போது ரூ. 200 மட்டுமே இருந்திருக்கிறது. மேலும் மும்பையில் அவருக்கு யாரையும் தெரியாது. மொழியும் தெரியாது. ஆனால் தனது கடின உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறினார். அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மும்பையில் வேலை தேடி அலைந்த பிரேமிற்கு, மஹீம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்திருக்கிறது. மாதம் ரூ.150 சம்பளம், ஆனால் இரவில் அந்த பேக்கரியிலேயே தூங்க அனுமதியிருந்தது என்பதால், தங்கும் இடம் கிடைத்தது.
இதையும் படிக்க : ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்… உலகின் முன்னனி சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் – யார் இந்த ஜெய் சௌத்ரி?




தோசைக்கடை துவக்கம்
இரண்டு ஆண்டுகளில், பல்வேறு உணவகங்களில் வேலை செய்து, ரூ.1,000 சேமித்து, ரூ.150க்கு ஒரு தள்ளுவண்டி வாடகைக்கு எடுத்து, வாஷி ரயில் நிலையம் எதிரே தோசைக் கடையை துவங்கினார். அவருடன் பின்னர் அவரது இரு சகோதரர்கள் முருகன் மற்றும் பரமசிவன் சேர்ந்தனர். தோசைக்கு சட்னி, சாம்பார் உள்ளிட்ட அனைத்தும் சொந்த ஊரில் இருந்து வாங்கிய பொருட்கள் மூலம் ரெசிபிகளாகவே தயாரித்தார். சுத்தம், ஒழுங்கு ஆகியவை மற்ற கடைகளில் இருந்து இவர்களைத் தனித்து காட்டியது. குறுகிய காலத்திலேயே மாதம் ரூ. 20,000 வருமானம் கிடைத்தது.
பிரேம் சாகர் தோசை பிளாசா உருவான விதம்
அவரது கடைசி காலத்திலேயே அசூர வளர்ச்சி அடைந்தது. இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு வாஷி பகுதியில் ரூ. 5, 000 வாடகையில் பிரேம் சாகர் தோசா பிளாசா என்ற உணவகத்தை துவங்கினார். அவரது கடை இளைஞர்களிடையே பிரபலமாக விரைவில் பிரபலமானது. இந்த நிலையில் இணையதளத்தில் தோசை ரெசிபிகளை ஆய்வு செய்து வித்தியாசமான தோசைகளை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக சேஸ்வான் தோசை, பன்னீர் சில்லி, ஸ்பிரிங் ரோல் தோசை உள்ளிட்ட 105 வகை தோசைகளை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் சென்டர் ஒன் மால் நிர்வாகம் நேரில் வந்து உணவகத்தில் உணவு உண்ட பிறகு, அவரை தங்கள் மாலில் வந்து அவுட்லெட் ஆரம்பிக்க அனுமதி வழங்கியது. இதனையடுத்து அவரது வளர்ச்சி உச்சத்தை அடைந்தது.
இதையும் படிக்க : மாற்றி யோசித்த நபர்… வெளிநாட்டு பிராண்டுகளை பின்னுக்கு தள்ளிய ட்ரூல்ஸ் நிறுவனம் – யார் இந்த ஃபஹிம்?
வெளிநாடுகளிலும் பிரேம் சாகர் தோசை பிளாசா
கடந்த 2003 ஆம் ஆண்டு, முதலாவது தோசா பிளாசா கிளை தானே பகுதியில் உள்ள வொண்டர் மாலில் தொடங்கப்பட்டது. அதன் பின் நோக்கிச் செல்லவே இல்லை. தற்போது இந்தியாவில் பல பகுதிகளிலும் வெளிநாடுகளான நியூசிலாந்து, துபாய், ஓமன் போன்ற நாடுகளிலும் 70க்கும் மேற்பட்ட கிளைகள் திறக்கப்பட்டன. ஆரம்பத்தில் சோர்ந்து போய் ஊர் திரும்பியிருந்தால் அவருக்கு இது நடந்திருக்காது. ஆனால் விடாமுயற்சியுடன் போராடிய பிரேம் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார். எளிய பின்னணியில் வந்து விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்பதற்கு பிரேம் கணபதியின் வாழ்க்கை மிகப்பெரும் முன்னுதாரணம்.