கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்த வேண்டும்?
Credit Card Rules : கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் திடீரென உயிரிழந்தால், நிலுவையில் உள்ள தொகையை யார் செலுத்த வேண்டும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். பொதுவாக, அந்த தொகையை குடும்பத்தினரிடமிருந்து வற்புறுத்தி வசூலிக்க வங்கிகளுக்கு உரிமை இல்லை. இதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்தியாவில் கிரெடிட் கார்டுகளை (Credit Card) பணக்காரர்கள், ஏழை என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள். கிரெடிட் கார்டுகள் நம்மிடம் பணம் இல்லாதபோது உதவுவதற்காக மட்டுமல்ல. அது அளிக்கும் தள்ளுபடிகள், ரிவார்ட்ஸ் போன்றவற்றின் மூலம் பணத்தை சேமிக்கவும் முடியும். எச்டிஎஃப்சி (HDFC), எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ, போன்ற வங்கிகள் மக்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப பல வகைகளில் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. கிரெடிட் கார்டின் வரம்பு பொதுவாக பயனாளியின் வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் வங்கிகள் நிர்ணயிக்கின்றன. குறிப்பிட்ட தேதி வரை பணம் செலுத்தினால் வட்டி வசூலிக்கப்படாது. ஆனால் எதிர்பாராத விதமாக கார்ட் வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அந்த கிரெடிட் கார்டில் உள்ள பாக்கிகளை யார் செலுத்த வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இறப்புக்கு பிறகு கிரெடிட் கார்டு பாக்கி வசூல் எப்படி நடக்கும்?
கிரெடிட் கார்டு கடன்களின் வசூல் முறைகள் வங்கிகளுக்கு ஏற்றபடி மாறுபட்டாலும், சட்டப்படி சில பொதுவான விதிகள் உண்டு. ஹோம்லோன் போன்று உறுதிமொழி அளிப்பவர் (guarantor) கிரெடிட் கார்டு கடன்களுக்கு இருக்க மாட்டார்கள். அதனால் பாக்கிகளை செலுத்தும் பொறுப்பு யார் பெயரில் கிரெடிட் கார்டு இருக்கிறதோ அவர்களிடமே இருக்கும். ஆனால் அந்த நபர் இறந்துவிட்டால், அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்யவோ, உறவினர்களிடம் வசூலிக்கவோ வங்கிகளுக்கு உரிமை உண்டு.
வங்கிகள் அல்லது கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பாக்கிகளை வாரிசுகள் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் இறந்தவரின் சொத்துகளை வாரிசுகள் கைப்பற்றுகிறார்களெனில், அந்த சொத்துகளின் மதிப்பளவிற்கு மட்டும் பாக்கிகளை வசூலிக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு நபருக்கு ரூ.3 லட்சம் கடன் பாக்கி இருந்தாலும் அவர் விட்டுச் செல்லும் சொத்தின் மதிப்பு ரூ.2 லட்சம்தான் என்றால், வங்கி அந்த ரூ. 2 லட்சம் வரையில் மட்டுமே வசூலிக்க முடியும். மீதமுள்ள ₹1 லட்சம் non-performing asset அல்லது bad debt என கணக்கிடப்படும்.
வாரிசுகளின் வருமானத்தில் இருந்து பணம் வாங்க முடியுமா?
வாரிசுகள் தங்களது சொந்த வருமானத்தில் இருந்து அந்த பாக்கிகளை செலுத்த வேண்டிய கட்டாயம் கிடையாது. இது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா விதிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில், வாடிக்கையாளர்களின் குடும்பத்தினரிடம் மோசமாக பேசுதல் , அச்சுறுத்தல்கள், தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுதல் போன்ற வசூல் முறைகளுக்கு தடை விதித்துள்ளது.
பாதுகாப்புக்காக கிரெடிட் கார்டு இன்சூரன்ஸ்
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கிரெடிட் கார்டு இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. இது மோசடி, நம் அனுமதியில்லாத பயன்பாடு, இறப்பு ஏற்பட்டால் பாக்கி தொகை செலுத்துவதில் இருந்து பாதுகாப்பு ஆகிய சலுகைகள் கிடைக்கும்.