வங்கி கணக்கிற்கு இனி 4 நாமினிகளை நியமிக்கலாம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி!
RBI's New Bank Account Nominee Rule | வங்கிகள் மற்றும் அது தொடர்பான அறிவிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வங்கி கணக்கும் மற்றும் லாக்கர் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
வங்கிகள் தொடர்பான முக்கிய நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வங்கி கணக்கு மற்றும் வங்கியில் லாக்கர் வைத்துள்ளவர்கள் வாரிசு தாரராக 4 பேரை நியமனம் செய்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வங்கி கணக்குகளில் உரிமை கோரப்படாமல் உள்ள பணத்தின் அளவை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வங்கி கணக்கு நாமினிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கி கணக்குகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் பணம்
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரிவர்த்தனைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றால் அந்த வங்கி கணக்கில் இருக்கும் பணம் ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு தானாகவே மாற்றம் செய்யப்படும். இவ்வாறு, உரிமை கோரப்படாத பணத்தை திரட்டி மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், கல்வி வளர்ச்சி திட்டங்களுக்காகவும் இந்த பணத்தை ரிசர்வ் வங்கி பயன்படுத்துகிறது. இந்த நிலையில் தான் உரிமை கோரப்படாமல் உள்ள பணத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்த வங்கி பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்!
வங்கி கணக்கு, லாக்கர்களுக்கு 4 பேரை நியமித்துக்கொள்ளலாம்
வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் லாக்கர்களில் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை பாதுகாப்பாக வைக்கும் நபர்கள் தங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்து உயிர் போய்விட்டால் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தும், லாக்கரில் இருக்கும் பொருட்களுக்குக்கும் வாரிசுதாரராக ஒரே ஒருவரை மட்டுமே நியமிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது வங்கி திருத்த சட்ட விதிகளின் அடிப்படையில் அந்த விதியில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்துள்ளது.
இதையும் படிங்க : மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
புதிய விதிகளின்படி, வங்கி கணக்கு மற்றும் லாக்கர் வைத்திருக்கும் நபர்கள் தங்களது பணம் மற்றும் உடமைகளுக்கு வாரிசுதாரராக 4 பேர் வரை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதி 2025, நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ரிசர்வ் வங்கி தகவலின்படி, ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.58,330 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.8,673 கோடியும் உரிமை கோரப்படாமல் உள்ளது. இவ்வாறு பணம் மற்று பொருட்கள் உரிமை கோரப்படாமல் உள்ளதை தவிர்க்கும் வகையில் தான் ரிசர்வ் வங்கி இந்த புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது.