குஜராத்தின் (Gujarat) ராஜ்கோட்டில் உள்ள ஒரு சின்னக் கடையில் உணவுப் பொருட்களை தனது தந்தை விற்பதைப் பார்த்து வளர்ந்த பிபின்பாய் வித்தல் ஹட்வானிக்கு, சிறு வயதிலிருந்தே தனது தந்தையின் தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் வளர்ந்ததும் தந்தையிடமிருந்து ரூ.4500 வாங்கி, சைக்கிளில் சேவு, மிக்சர் போன்ற ஸ்நாக்ஸ் (Snacks) பொருட்களை விற்கத் தொடங்கியிருக்கிறார். அப்பகுதியில் அவரது புகழ் மெல்ல வளர்ந்தது. மக்களுக்கு அவரது விற்கும் பொருட்களின் ருசி பிடித்துப்போனது. இதனையடுத்து 4 ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கடன் பெற்று, சொந்த முயற்சியில் ‘கோபால் ஸ்நாக்ஸ்’ என்ற நிறுவனத்தை துவங்கினார்.
வீட்டையே தொழிற்சாலையாக மாற்றிய பிபின்
கடந்த 1994-ஆம் ஆண்டு, பிபின் தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு வீடு வாங்கி அதை உணவுப் பொருட்கள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையாக மாற்றினார். அந்த வீட்டில் அவரது மனைவி, ஸ்நாக்ஸ் தயாரித்து அவரது விற்பனைக்கு உதவினார். இந்த நிலையில் பிபின் ராஜ்கோட் நகரம் முழுவதும் கடைகாரர்களையும், டிரேடர்களையும் சந்தித்து விற்பனையை விரிவாக்க முயன்றார். இருவரது இணை முயற்சிகளால் வியாபாரம் மெதுவாக வளரத் தொடங்கியது.
இதையும் படிக்க: இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனத்துக்கு தலைவராகும் தமிழர் – யார் இந்த ஆர்.துரைசாமி?
நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து முயற்சித்த பிபின்
விற்பனை அதிகரித்தபோது, ராஜ்கோட்டின் புறநகரில் பெரிய தொழிற்சாலை அமைத்தார். ஆனால் அந்த இடம் மிக தொலைவாக இருந்த காரணமாக பொருட்களை நகருக்குள் எடுத்து வர சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அதிலும் நம்பிக்கையை இழக்காமல், நகரத்துக்குள் ஒரு சிறிய தொழிற்சாலையை கடன் வாங்கி ஆரம்பித்தார். இந்த புதிய ஆரம்பமே கோபால் ஸ்நாக்ஸ் நிறுவனத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.
கோபால் ஸ்நாக்ஸின் அசூர வளர்ச்சி
இப்போது, கோபால் ஸ்நாக்ஸ் இந்தியாவின் நான்காவது பெரிய பாரம்பரிய ஸ்நாக்ஸ் பிராண்டாக வளர்ந்துள்ளது. தற்போது ரூ.5507 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனம், பிபின்பாய் ஹட்வானியின் விடாமுயற்சி, நேர்மையான பணி, தெளிவான கண்ணோட்டம் ஆகியவற்றால் உருவானது. தனது தொழிலில் ஒருவர் தொடர்ந்து நம்பிக்கையுடன் முயற்சித்தால் வளர்ச்சி நிச்சயம் என்பதை பிபின் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
இதையும் படிக்க: 70 முறை நிராகரிப்பு…. ரூ.6,700 கோடி மதிப்பில் நிறுவனம் – ரேபிடோ நிறுவனர் ஜெயித்த கதை
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஒரு சைக்கிள் மூலம் ஸ்நாக்ஸ் விற்றவர் இன்று கோடிக்கணக்கான மதிப்புடைய நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் பிபின். மன உறுதி, உழைப்பு, தெளிவு ஆகியவை இணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மிகச்சரியான உதாரணமாக இருக்கிறார் பிபின். அவரது வாழ்க்கை தொழிலில் முன்னேற துடிக்கும் அனைவருக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.