Indian Railway: ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு.. வருது புது ரூல்ஸ்!
Online Ticket Booking: இந்திய ரயில்வே, பயணிகளின் வசதிக்காக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 2025 அக்டோபர் 1 முதல், முதல் 15 நிமிடங்கள் பொது முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என தெரிவித்துள்ளது. அதேசமயம் கவுண்டர் முன்பதிவில் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே நிர்வாகம் முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறும் முறையில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றம் 2025, அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது ஐஆர்சிடிசி மொபைல் செயலியில் திறக்கும் முதல் 15 நிமிடங்களுக்கான பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளில் ஆதார் விவரங்களை இணைத்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என சொல்லப்பட்டுள்ளது. இது முன்பதிவு முறையை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துவதையும், உண்மையான பயணிகளுக்கு நியாயமான அணுகலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுண்டர் முன்பதிவில் மாற்றம் இல்லை
ஆனால் ரயில் நிலைய கவுண்டர்களில் முன்பதிவு செய்வதற்கான நேரம் அப்படியே இருக்கும் என்றும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஒரு ரயிலுக்கான முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தடுக்கும் தற்போதைய 10 நிமிடக் கட்டுப்பாடும் தொடரும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் (CRIS) மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவை அதற்கேற்ப தங்களுடைய கணக்குகளை புதுப்பிக்குமாறு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மண்டல ரயில்வே நிர்வாகங்கள் இதனை சீராக செயல்படுத்த தெளிவான வழிகாட்டுதல்களை பயணிகளுக்கு வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
புதிய விதி என்ன சொல்கிறது?
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சாதனமாக ரயில்கள் திகழ்ந்து வரும் நிலையில் அதில் பாசஞ்சர் ரயில் தொடங்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வரை பல்வேறு கட்டண வேறுபாடுகளுடன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம், சரியான நேர கடைப்பிடிப்பு ஆகியவை காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரயில் பயணங்களை விரும்புகின்றனர். இதனால் ரயில் டிக்கெட்டுகள் கிடைப்பதில் பல நேரங்களில் சிரமங்கள் ஏற்படுகிறது.
அதேசமயம் கள்ள சந்தையில் ரயில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக இருந்த புகார்களை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒரு நாள் முன்பாக புக்கிங் செய்யப்படும் தட்கல் டிக்கெட்களுக்கு ஆதார் இணைப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் 10 நிமிடங்கள் கடந்த பிறகு ரயில் டிக்கெட்டை தட்கல் முன்பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read:ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல் – டிக்கெட் புக் செய்யும் முறையில் புதிய மாற்றம்
இந்த நிலையில் தற்போது ஒரு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது என்றால் முதல் 15 நிமிடங்கள் ஆதார் இணைப்பு கொண்ட கணக்குகளால் மட்டுமே டிக்கெட்டுகளை பெற முடியும். 15 நிமிடத்திற்கு பிறகு ஆதார் இணைப்பு இல்லாத ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருப்பவர்களாலும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது புது விதியாக அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் மோசடிகள் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.