மகனுக்காக உருவாக்கிய கெமிக்கல் இல்லா நீச்சல் குளம் – ரூ.3 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நபர் – எப்படி நடந்தது இந்த மேஜிக்

Success Story : கோயம்புத்தூரை சேர்ந்த விகாஷ் குமார், தன் மகனுக்காக கெமிக்கல் இல்லாத நீச்சல் குளத்தை உருவாக்கியவர் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3 கோடி வருமானத்தை ஈட்டும் தொழிலாக மாற்றியிருக்கிறார். அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மகனுக்காக உருவாக்கிய கெமிக்கல் இல்லா நீச்சல் குளம் - ரூ.3 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நபர் - எப்படி நடந்தது இந்த மேஜிக்

கெமிக்கல் இல்லாத நீச்சல் குளம்

Published: 

12 Sep 2025 14:42 PM

 IST

கோயம்புத்தூரைச் (Coimbatore) சேர்ந்த சார்டடர்ட் அக்கவுண்டன்ட் விகாஷ் குமார் என்பவர் தன்னுடைய இளைய மகனுக்காக ஒரு நீச்சல் குளத்தை தேடியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான நீச்சல் குளத்தில் குளோரின் கலந்த நீர் பயன்படுத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். காரணம் குளோரின் சருமம், முடி, மூச்சுக்குழாய் ஆகியவற்றில் தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்த அவர், இயற்கை பொருட்களால் மட்டுமே அமைந்த ஒரு நீச்சல் குளத்தை அமைக்க முடிவு செய்தார். தன் கிராமத்தில் களிமண்ணால் உருவான குளங்களில் நீந்திய அனுபவம் கொண்ட விகாஷ் குமார், தன் மகனுக்கு அந்த அனுபவத்தை வழங்க முடிவு செய்கிறார். அப்படி உருவானது தான் கெமிக்கல் இல்லாத நீச்சல் குளம்.

சிமெண்ட், கெமிக்கல் இல்லா இயற்கை நீச்சல் குளம்

வழக்கமான நீச்சல் குளங்களில் பயன்படும் குளோரின் கண்களுக்கு எரிச்சல், முடி கொட்டுதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் தன் மகன் நீச்சல் குளத்தில் குளித்த பிறகு சிவந்த கண்களோடு வெளியே வரக்கூடாது என்ற எண்ணத்தில் விகாஷ், பொள்ளாச்சியில் தன் பண்ணை வீட்டில் ஒரு இயற்கை நீச்சல் குளத்தை உருவாக்கினார்.

இதையும் படிக்க : 1 ரூபாய் ஷாம்பூ பாக்கெட்… இந்தியாவில் தொழில் புரட்சிக்கு காரணமான தமிழர் – கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிக் கதை

அதில் சிமெண்ட், பிளாஸ்டிக், குளோரின் போன்ற எந்த ரசாயன பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக மண், கற்கள், தாவரங்கள் மற்றும் இயற்கை பாக்டீரியாக்கள் மூலம் சுத்தப்படுத்துகிறது. நீர் தொடர்ச்சியாக குறைந்த சக்தி கொண்ட பம்ப் மூலம் நீர் மாற்றப்படுகிறது. இதனால் நீரில் எந்த ரசாயனமும் இல்லாமல் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

பயோஸ்பியர் நீச்சல் குளத்தின் வீடியோ

 

பயோஸ்பியர் நிறுவனம் உருவான விதம்

மகனுக்காக தொடங்கிய முயற்சி வணிகமாக மாறியது. ஐரோப்பாவில் பிரபலமான பயோ ஸ்விம் பாண்ட் முறையை ஆய்வு செய்த விகாஷ், அதனை இந்திய வானிலைக்கு ஏற்ப மாற்றி உருவாக்கினார். உலக அளவில் பயோ நீச்சல் குளத்துக்கான மார்கெட் வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் 4 பில்லியன் டாலர் ஆகும் என்ற கணிப்பு அவருக்கு ஊக்கம் அளித்திருக்கிறது.

இதன் அடிப்படையில் பயோஸ்பியர் (Biosphere) என்ற நிறுவனத்தைத் தொடங்கி பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், தனியார் வீடுகள் ஆகிய இடங்களுக்கு இயற்கை நீச்சல் குளங்களை வடிவமைத்து வழங்க ஆரம்பித்தார்.  ஒவ்வொரு குளமும் 45 நாட்களில் உருவாக்கப்படுகிறது. அதனுடன் சிறிய ஓடைகள், நீர் வீழ்ச்சி போன்ற கூடுதல் வசதிகளையும் சேர்த்து வழங்கினார். இதன் மூலம் பராமரிப்பு செலவு குறைவு. நீரை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால் மக்கள் ஆதரவும் விகாஷ் குமாருக்கு கிடைத்தது.

இதையும் படிக்க : மூங்கில் இலையில் துணிகள்… ரூ.200 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்

ஆண்டுக்கு ரூ.3 கோடி வருமானம்

இப்போது பயோஸ்பியர் நிறுவனம் ஆண்டு ரூ.3 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறது. இந்த முயற்சி சுற்றுச்சூழலை பாதுகாக்க்கும் பொறுப்புணர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்தியாவில் நீரை வீணாக்காமல் பயன்படுத்தும் புதிய முயற்சியையும் ஊக்குவிக்கிறது.