ஈரான் மீது விரிவான தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்? இதனால் அமீரகத்தில் இருக்கும் இந்தியர்கள் பிற தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
US - Iran War: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலா, விமானப் போக்குவரத்து மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்த பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 18, 2026: ஈரான் மீது விரிவான ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கா வரும் நாட்களில் டஜன் கணக்கான எரிபொருள் நிரப்பும் ராணுவ விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப உள்ளதாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து விரைவில் உத்தரவிடக்கூடும் என அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம்:
இஸ்ரேலில் உள்ள பென் குரியான் விமான நிலையத்தில் தற்போது சுமார் 30 அமெரிக்க ராணுவ எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இருப்பதாகவும், இதே எண்ணிக்கையிலான விமானங்கள் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ரமோன் விமான நிலையத்திலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க விமானத் தளங்கள் ஈரானின் தாக்குதலுக்கு அதிகம் இலக்காகக்கூடும் என்பதால், பென் குரியான் விமான நிலையம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கில் கடற்படை முற்றுகையை மேற்கொண்டு வருவதால், அவற்றின் நகர்வுகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் ஈரானிய கடற்படைப் பிரிவுகளின் கண்காணிப்பில் இருப்பதாக ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை தெரிவித்துள்ளது. “ஈரானிய ஆயுதப் படைகள் அமெரிக்க கடற்படைப் பிரிவுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் நேரம் நெருங்கி வருகிறது. காத்திருந்து பாருங்கள்” என அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் – அதிபர் டிரம்ப் ஆலோசனை:
அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையின் ‘சிட்யூவேஷன் ரூம்’ எனப்படும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அதிகாரிகளுடன் ஈரான் மீது மேற்கொள்ளக்கூடிய பல்வேறு ராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி தொடர்பான மையங்கள் மற்றும் நிலத்தடியில் அமைந்துள்ள முக்கியமான பாதுகாப்பு தளங்களைத் தாக்குவது உள்ளிட்ட விருப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்படக்கூடும் பொருளாதார பாதிப்புகள் என்ன?
இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலா, விமானப் போக்குவரத்து மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்த பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
துபாயில் பல வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும், பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சில நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்துள்ள நிலையில், பல தொழிலாளர்கள் புதிய வேலை தேடி அலைந்து வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரக அரசு, பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 680 மில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. இருப்பினும், போர் நீடிக்கும் நிலையில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் தொடர்பான நிச்சயமற்ற நிலை தொடர்வதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.