ரஷ்ய போருக்கு காரணம்… ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் – டிரம்ப் அழைப்பு
Trump Targets India: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மற்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அது குறித்து பார்க்கலாம்.

டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) செப்டம்பர் 23, 2025 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியாவை குறிவைத்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் அவர் தனது உரையின் ஆரம்பத்தில், நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த ஒரு போரை நிறுத்தினேன். இது நான் நிறுத்திய ஏழு பெரிய போர்களில் ஒன்றாகும் என்று தெரிவித்தார். இதனை அவர் ஏற்கனவே பல முறை கூறியிருந்தாலும், உலகின் மிகப்பெரிய அரங்கான ஐ.நாவில் இதுகுறித்து அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘ரஷ்யாவுக்கு நிதி வழங்கும் இந்தியா’
அதன் பிறகு, ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் சூழ்நிலையைப் பற்றி பேசிய டிரம்ப், இந்த போரை ரஷ்யா நடத்துவதற்கு இந்தியா மற்றும் ரஷ்யா தான் நிதி வழங்குகிறார்கள். அவர்கள் ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து வாங்கி வருகிறார்கள். இது ரஷ்ய அதிபர் புதினுக்கு போரின் மூலதனமாக உதவுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையும் படிக்க : H-1B Visa: H-1B விசா கட்டணத்தை உயர்த்திய ட்ரம்ப்.. இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு!
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கடுமையான தடைகள் விதிக்க வேண்டும். ரஷ்யாவின் போருக்கு முக்கிய நிதி உதவியாளர்களாக சீனாவும் இந்தியாவும் உள்ளன. அவர்கள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ளது. இங்குள்ள அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இணைந்து, அவர்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும். இதுவே போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நான் இந்திய பொருட்களின் இறக்குமதிகளுக்கு கூடுதலாக 25 சதவிகிதம் சுங்கவரி விதித்தேன். இதனால் மொத்த சுங்கவரி 50 சதவிகிதம் ஆனது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தச் செய்வது தான் இதன் நோக்கம் எனக் கூறினார்.
சீனாவுக்கு விதிவிலக்கு
சீனாவுக்கு இதுவரை டிரம்ப் பெரிய சுங்கவரி விதிக்கவில்லை. மாறாக, சமீபத்தில் சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசி, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, “இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் தெரிகின்றன. ஆனால், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்படாத வரை பிரச்னை நீடிக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிக்க : போதைப்பொருள் அச்சுறுத்தல் நாடுகள்.. இந்தியா பெயரை சேர்த்த ட்ரம்ப்!
ரஷ்யா – உக்ரைன் போருக்கான தனது நடுநிலை முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்று டிரம்ப் தனது அதிருப்தியை பதிவு செய்தார். ரஷ்ய அதிபர் புதின் தான் போருக்கு காரணம், ஆனால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் சிக்கலை தீர்க்க முன்வரவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.