H-1B Visa: H-1B விசா கட்டணத்தை உயர்த்திய ட்ரம்ப்.. இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு!
Donald Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், H-1B விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளார். இது இந்தியத் தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும். அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை சிறப்புத் துறைகளில் பணியமர்த்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா, செப்டம்பர் 20: அமெரிக்கா அரசால் வழங்கப்படும் H-1B விசாவுக்கான வருடாந்திர கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். H-1B விசாக்களுக்கு $100,000 விண்ணப்பக் கட்டணத்தை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி கட்டணம் இந்திய மதிப்பில் ரூ.88 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திறமையான தொழிலாளர்களின் அவசியத்தை வலியுறுத்தி, திட்டத்தின் அதிகப்படியான பயன்பாட்டைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை எங்களுக்கு சிறந்த தொழிலாளர்கள் தேவை, இந்த நடவடிக்கை மூலம் அதுதான் நடக்கப் போகிறது என்பது உறுதியாகும் என ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் சிறப்புத் துறைகளில் மிகவும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தவும் அனுமதிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. H-1B விசாவானது அமெரிக்க நாட்டில் சிறப்புத் தொழில்களில் தற்காலிகமாக வேலை செய்ய பிற நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களைப் பணியமர்த்தும் பொருட்டு அமெரிக்க நிறுவன உரிமையாளர்களுக்கு அனுமதிக்கும் ஒரு வகையிலான குடியுரிமை அல்லாத விசாவாகும்.
இதையும் படிங்க: இந்தியா மீது 100% வரி விதிக்க வேண்டும்.. ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்..




ஆனால் டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் அமெரிக்கா பிற நாடுகளைச் சேர்ந்த சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதை நிறுத்தினால், அது பொருளாதாரத்தை புதுமைப்படுத்தி வளர்க்கும் அதன் திறனை வெகுவாகக் குறைக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் அமேசன் மற்றும் அதன் கிளவுட்-கம்ப்யூட்டிங் பிரிவான AWS, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட H-1B விசாக்களுக்கு ஒப்புதல் பெற்றது.
அதே நேரத்தில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் தலா 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட H-1B விசா ஒப்புதல்களைப் பெற்றன. H-1B திட்டம் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவன உரிமையாளர்களுக்கு ஆண்டுதோறும் 65 ஆயிரம் விசாக்களை வழங்குகிறது. கடந்த ஆண்டு H-1B விசாக்களால் அதிக அளவில் பயனடைந்த நாடாக இந்தியா இருந்தது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது – அதிபர் டிரம்ப் அதிரடி..
ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள்
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அன்று முதல் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பல்வேறு விதமான திட்டங்களை அவர் வகுத்து வருகிறார். இதன் சாதகமான விளைவுகளை மட்டுமே அவர் எதிர்பார்க்கிறார். அந்த வகையில் சட்டப்பூர்வ குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குடியேற்றக் கட்டுப்பாட்டை கொண்டு வந்தார்.
தொடர்ந்து பிறநாடுகளைச் சேர்ந்த பொருட்களுக்கு கடுமையான இறக்குமதி வரி விதிப்பை அமல்படுத்தினார். இதில் இந்தியாவுடனான உறவில் விரிசலுக்கு வழி வகுத்தது. அதன்படி H-1B விசா திட்டத்தை மறுவடிவமைப்பதற்கான நடவடிக்கையாக அவரது நிர்வாகத்தின் மிகவும் உயர்மட்ட முயற்சியாக வருடாந்திர கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது.