விமான பாணியாளருக்கு திடீர் உடல்நல சிக்கல்.. விரைந்து செயலாற்றி உயிரை காப்பாற்றிய தமிழக மருத்துவர்கள்!
Tamil Doctors Saved Flight Attendant Life | எத்தியோப்பியாவில் இருந்து அபுதாபிக்கு சென்றுக்கொண்டு இருந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துக்கொண்டு இருந்தனர். அப்போது பணியாளருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், விமானத்தில் இருந்த தமிழக மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.
அபுதாபி, டிசம்பர் 12 : எத்தியோப்பியாவின் (Ethiopia) தலைநகர் அடிஸ் அபாபா (Addis Ababa) நகரில் இருந்து அபுதாபிக்கு எதிகாத் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அந்த வகையில், அதே விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்களான கோபிநாதன் மற்றும் சுதர்சன் பாலாஜி ஆகிய இரண்டு மருத்துவர்களும் பயணம் செய்துள்ளனர்.
நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது பணியாளருக்கு ஏற்பட்ட சிக்கல்
அடிஸ் அபாபா நகரில் இருந்து புறப்பட்ட விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டு இருந்துள்ளது. வழக்கம் போல விமான பணிப்பெண்கள், பயணிகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆண் பணியாளர் ஒருவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை கண்டு சக பணியாளர்கள் மற்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் என அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : இந்தோனேசியாவில் 7 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. கர்ப்பிணி உட்பட 20 பேர் உடல் கருகி பலி!




உடனடி சிகிச்சை வழங்கிய தமிழக மருத்துவர்கள்
இந்த நிலையில், விமான பணியாளருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை உணர்ந்த அந்த விமானத்தில் பயணம் செய்துக்கொண்டு இருந்த தமிழக மருத்துவர்கள் விரைந்து சென்று அந்த நபருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அந்த நபர் ஆக்சிஜன் குறைபாடால் தவித்த நிலையில், மருத்துவர்கள் விமானத்தில் இருந்த சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் அவருக்கு முதலுதவி வழங்கியுள்ளனர். அதற்கு பிறகு அந்த நபரின் உடல்நிலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இதையும் படிங்க : இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க தயாராகும் டிரம்ப்.. இந்த முறை விவசாயிகளை குறி வைக்கிறார்!
பயணம் முடியும் வரை சோதனை செய்துக்கொண்டே இருந்த மருத்துவர்கள்
அந்த நபரின் உடல்நிலை சீரான பிறகும் குறிப்பிட்ட இடைவெளியில் அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் சோதனை செய்து வந்துள்ளனர். பின்னர் விமானம் தரையிறங்கியதும் அந்த பயணியை விமான குழுவினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விமான பயணம் முழுவதும் மிகவும் அர்பணிப்புடன் அந்த நபருக்கு சிகிச்சை வழங்கிய தமிழக மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.