இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க தயாராகும் டிரம்ப்.. இந்த முறை விவசாயிகளை குறி வைக்கிறார்!
Trump Planning Taxation On India Again | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே இந்தியா மீது 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளார். இந்த நிலையில், அவர் இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க திட்டமிட்டுள்ளார். அதுவும் இந்த முறை விவசாயிகளை பாதிக்க கூடிய வகையில் அவர் வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே டொனால்ட் டிரம்ப் (Donald Trump) பல்வேறு மாற்றங்களையும், புதிய விதிகளையும் அறிமுகம் செய்து வருகிறார். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் மீது அதிக அளவு வரி விதித்து வருகிறார். இந்தியா தனது நட்பு நாடென கூறும் டிரம்ப், இந்தியா மீது தற்போது 50 சதவீத வரியை அமலில் வைத்துள்ளார். இதேபோல மேலும் பல நடுகளுக்கு அவர் இறக்குமதி வரியை விதித்துள்ளார்.
இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த டிரம்ப்
இந்தியாவில் இருந்து உணவு பொருட்கள், உடைகள் என பல விதமான பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க போவதாக உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டார். பிறகு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார். அதன்படி, இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் தற்போது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : 2026-ல் தான் ஆட்டமே இருக்கிறது.. தங்கம் விலை அதிரடியாக உயரும்.. ஷாக் கொடுக்கும் தரகு நிறுவனம்!




ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா
இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி டிரம்ப் அதிக இறக்குமதி வரி விதித்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்துள்ளது. அதற்கு பதிலாக அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்களில் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இதற்கு இடையே இந்தியா மீதான இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பாகவும் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியா மீதான இறக்குமதி வரியை குறைக்காமல் கூடுதல் வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி.. வீடு, வாகன கடன் வட்டி விகிதம் குறையபோகுது
இந்திய விவசாயிகளை குறிவைக்கும் டிரம்ப்
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் மானிய விலையில் அமெரிக்காவில் அரிசி இறக்குமதி செய்வது அமெரிக்க சந்தைகளை பாதிப்பதாக விவசாயிகள் கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அரிசிகளுக்கு வரி விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 50 சதவீத வரியால் இந்தியாவின் ஜவுளி, தோல், உணவு உள்ளிட்ட துறைகள் கடுமையான சவால்களை சந்தித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த புதிய அறிவிப்பு மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது.