Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. இந்தியா கனடா உறவில் ஓர் புதிய அத்தியாயம்..

G7 Summit Meeting: ஜி7 உச்சி மாநாட்டுக்கான அழைப்பு, இந்தியாவுடனான உறவுகளையும், பல துறைகளில் நடந்து வரும் கூட்டாண்மைகளையும் மீண்டும் சீராக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான கனடாவின் நோக்கத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து பேசினார்.

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. இந்தியா கனடா உறவில் ஓர் புதிய அத்தியாயம்..
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Jun 2025 09:45 AM

ஜி7 உச்சி மாநாட்டில் இந்தியா: ஆல்பர்ட்டாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் (G7 Summit) ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), கனடா பிரதமர் மார்க் கார்னியை  சந்தித்தார். ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தின் கீழ் கடந்த ஆண்டு மோசமடைந்த உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான நம்பிக்கையை இந்த சந்திப்பு உருவாக்கியுள்ளது. இந்த சந்திப்பின் போது, ​​பிரதமர் மோடி, “இந்தியா மற்றும் கனடா இடையே இருக்கும் உறவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என வலியுறுத்தினார். மேலும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார். கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அடக்கியதுதான் ஜி 7 அமைப்பு. இந்த மாநாடு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி:

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜி 7 மாநாடு கனடாவில் நடைபெற்றது. கனடா பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, பிரதமர் மார்க் கார்னியும் பிரதமர் மோடியும் பரஸ்பர மரியாதை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் கொள்கைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கனடா-இந்தியா உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி:


வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார், மேலும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையைத் தூண்டுமாறு பிரதமர் மோடி, அவர்களை வலியுறுத்தினார், மேலும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் தங்கள் மக்களிடையே வலுவான மற்றும் வரலாற்று உறவுகள், இந்தோ-பசிபிக் பகுதியில் கூட்டாண்மைகள் மற்றும் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வணிக தொடர்புகள் – பொருளாதார வளர்ச்சியில் கூட்டாண்மை மற்றும் எரிசக்தி மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, பிரதமர் மோடி தரப்பில், நிலையான மற்றும் பசுமையான பாதையின் மூலம் அனைவருக்கும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது. அதோடு, எரிசக்தி பாதுகாப்பு, AI இன் எதிர்காலம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒன்றாகச் சமாளிப்போம் என கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா ஜி7 இல் உறுப்பினராக இல்லை என்றாலும், மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு, இந்தியாவுடனான உறவுகளையும், பல துறைகளில் நடந்து வரும் கூட்டாண்மைகளையும் மீண்டும் சீராக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான கனடாவின் நோக்கத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கனடா உறவு விரிசலுக்கு பின் கனடாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர்:

2023 ஆம் ஆண்டு காலஸ்தானி ஆதரவு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருக்கக்கூடிய உறவானது எப்போதும் இல்லாத அளவு விரிசல் விட்டது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடாவுக்கு செல்லும் முதல் பயணம் இதுவே ஆகும். நிஜ்ஜார் கொலைக்கு அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த கொலையின் இந்திய முகவர்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்து ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கனேடிய மண்ணில் இருந்து காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் செயல்பட அனுமதித்ததாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.