Global Conflicts: லாப நோக்கம்! இரு நாடுகளுக்கு இடையே சண்டையை தூண்டும் அமெரிக்கா.. பாகிஸ்தான் அமைச்சரின் கருத்தால் பரபரப்பு!
Pakistan Minister Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், அமெரிக்கா தனது ஆயுதத் தொழிலுக்கு லாபம் ஈட்டும் வகையில் உலகளாவிய மோதல்களைத் தூண்டுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா ஏராளமான போர்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மூலம் லாபம் ஈட்டுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவி, கடுமையான விவாதங்களைத் தூண்டியுள்ளது.

பாகிஸ்தான், மே 26: அமெரிக்கா (America) குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் (Pakistan Defence Minister Khawaja Asif) கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், அமெரிக்கா தனது ஆயுத தொழிலுக்கு நன்மை அளிக்கும் வகையில் உலகளாவிய மோதல்களை மேண்டுமென்றே தூண்டிவிடுவதாகவும். அமெரிக்கர்கள் உலகம் முழுவதும் 100 ஆண்டுகளுக்கு மேலாக இதை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். ஒரு நேர்காணலின்போது பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறிய கருத்து, தற்போது இணையதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
என்ன சொன்னார் கவாஜா ஆசிஃப்..?
கடந்த நூற்றாண்டில் பல சர்வதேச மோதல்களுக்கு அமெரிக்க மையமான இருப்பதாக காணொளியில் பேசினார் கவாஜா ஆசிஃப். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “ கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்கர்கள் 260 போர்களை நடத்தியுள்ளனர். அதேநேரத்தில், சீனா மூன்றில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. ஆயினும்கூட, அமெரிக்கா தொடர்ந்து பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இராணுவ தொழில் ஒரு பெரிய, நன்கு நிறுவப்பட்ட துறையாகும். மேலும், இது அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதனால்தான், அமெரிக்கா தொடர்ந்து மோதல்களை உருவாக்குகிறார்கள்.” என்றார்.
கவாஜா ஆசிஃப் பேசிய காட்சி:
🚨HUGE: Pakistan Defence Minister Khawaja Asif says that US fuels war between two countries to sell weapon & make money.
Doland @realDonaldTrump ye sahi bol raha hai? pic.twitter.com/9HaTJKfnIl
— BALA (@erbmjha) May 24, 2025
இரு தரப்பில் விளையாடும் அமெரிக்கா:
தொடர்ந்து பேசிய அவர், “ஆப்கானிஸ்தான், சிரியா, எகிப்து மற்றும் லிபியா போன்ற நாடுகள் ஒரு காலத்தில் வளமானவையாக இருந்தன. ஆனால், இப்போது நீடித்த போர்களால் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் ஒரு காலத்தில் செல்வந்தராக இருந்தன. இப்போது அவை திவாலாகிவிட்டன.
அமெரிக்கா தனது இராணுவ – தொழில்துறை வளாகத்தை லாபகரமாக இயங்க வைப்பதற்காக போர்களில் இரு நாடுகளிடம் விளையாடுகிறது.” என்றார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேசிய கருத்துகள் சமூக ஊடக தளமான X இல் வைரலாகி, உலகளவில் கடுமையான விவாதத்தையும் விமர்சனத்தையும் தூண்டியுள்ளது. மேலும், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சிலரே பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு எதிராக பேசி வருகின்றனர். இதில் ஒரு பயனர், “பாகிஸ்தானுக்கு உதவி தேவைப்படும்போது, அது அமெரிக்காவின் கால்களைப் பிடிக்க ஓடியது, இப்போது போர் நிறுத்தம் நடந்த பிறகு, அது அமெரிக்காவை மீண்டும் குறை கூறத் தொடங்கியுள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “முழு இராணுவக் கோட்பாட்டையும் ஒரு வெளிநாட்டு நாட்டைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்” என்று கருத்து தெரிவித்தார்.