துபாயில் ஒரே இரவில் மர்மமாக மறைந்த நிறுவனம் – கோடிக்கணக்கான பணத்தை இழந்த இந்தியர்கள்
Dubai Scam Shocks Investors : துபாய் செயல்பட்டுவந்த நிறுவனம் திடீரென தடயமின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்த நிறுவனம், அனுமதியற்ற இணைய தளத்தின் வழியாக முதலீட்டை தூண்டியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

துபாயில் (Dubai) இயங்கி வந்த ஒரு பிரபலமான ப்ரோக்கரேஜ் நிறுவனம் இரவோடு இரவாக தடயமின்றி அடியோடு மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கல்ஃப் ஃபர்ஸ்ட் கமர்ஷியல் புரோக்கர்ஸ்’ எனப்படும் நிறுவனம், இந்தியா (India) உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமான முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணங்களை வசூலித்துவிட்டு, தற்போது தலைமறைவாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துபாயில் உள்ள பிஸினஸ் பே பகுதியில் உள்ள கேப்பிடல் கோல்டன் டவரில் 302 மற்றும் 305 என இரண்டு அலுவலகங்களைக் கொண்டிருந்த இந்த நிறுவனம், கடந்த மாதம் வரை சுமார் 40 ஊழியர்களுடன் இயங்கி வந்திருக்கிறது. முதலீட்டாளர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, முதலீடுகள் தொடர்பான வாய்ப்புகள் தெரிவித்து அவர்களை ஈர்த்து வந்தது.
தற்போது அந்த அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அங்கே தொலைபேசி வயர்கள் மட்டுமே இருக்கின்றன. மற்றபடி அங்கே ஒரு அலுவலகம் இயங்கி வந்ததற்கான தடயமே இல்லாமல் இருக்கிறது. அலுவலகத்தில் இருந்தவர்கள் சாவியை ஒப்படைத்து, எல்லாவற்றையும் சுத்தம் செய்து, வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும், இப்போது தினமும் பலர் வந்து அந்த நிறுவனம் பற்றி கேட்கிறார்கள் எனவும் , அக்கட்டடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் ஒருவர் தெரிவித்தார்.
ரூ.62 லட்சத்தை இழந்த இந்திய சகோதரர்கள்
இந்தியாவிலிருந்து துபாய்க்கு சென்று வேலை பார்த்து வந்த முகம்மது மற்றும் ஃபயாஸ் போயல் சகோதரர்கள், இந்த நிறுவனத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.62 லட்சம் முதலீடு செய்திருந்திருக்கின்றனர். தற்போது அங்கே அலுவலகம் இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தபோது அனைத்து எண்களும் அணைக்கப்பட்டுள்ளன. அலுவலகம் காலியாக உள்ளது. எவரும் பதிலளிக்கவில்லை. உண்மையாக அலுவலகம் இருந்ததா என்றே தெரியவில்லை,” என ஃபயாஸ் வேதனையுடன் கூறினார்.
அவர்களை ரிலேஷன்ஷிப் மேனேஜர் என்ற பெயரில் முதலீடு செய்ய தூண்டியவர், ஆரம்பத்தில் 1,000 செலுத்தச் சொல்லியதோடு, தொடர்ந்து அதிக பணம் செலுத்தும்படி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. முதலில் அவர்களுக்கு சிறிய லாபங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்கள் மூதலீடு செய்த தொகையை அந்நிறுவனம் திருப்பி அளித்த நிலையில் அவர்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அதிக தொகைகளை முதலீடு செய்ய வற்புறுத்தியதன் பேரில் அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சகோதரர்கள் இருவரும் முதலீடு செய்யத் துவங்கியிருக்கின்றனர்.
மொத்த சேமிப்பையைம் இழந்த கர்நாடகாவை சேர்ந்த நபர்
இதே போல கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு முதலீட்டாளர் 2,30,000 டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.9 கோடி இழந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ”எனது ரிலேஷன்ஷிப் மேனேஜர் கன்னடத்தில் பேசினார். அதனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆரம்பத்தில் லாபம் கிடைத்தது. மேலும் சிறிது பணத்தை திருப்பி கொடுத்ததால் மேலும் முதலீடு செய்தேன். பின்னர் சிக்கிக்கொண்டேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
மோசடியின் பின்னணி
இந்த நிறுவனம் முதலீட்டாளர்களை ‘Sigma-One Capital’ எனும் ஒரு இணையதளத்தின் வழியாக முதலீடு செய்ய வலியுறுத்தியிருக்கிறது. தற்போது வெளியாகிய தகவல்களின் படி, இந்த இணையதளம் துபாய் நிதி சேவை ஆணையம் (DFSA) ஆகியவற்றின் முறையான அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்துள்ளது. இரண்டு வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்தியதாகும் கூறப்படுகிறது . இந்த நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களிடம் பேசும்போது Gulf First Commercial Brokers என்றும் Sigma-One Capital என்றும் இரண்டு விதமான பெயர்களை பயன்படுத்தியிருக்கிறது. மேலும் இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவை இரண்டும் ஒரே நிறுவனம் என கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளனர். துபாய் போலீசார் தற்போது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.