இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஸ்டைலில் நெட்ஃபிளிக்ஸ் – வெளியாகிறது புதிய அப்டேட்
Netflix’s New Feature : நெட்ஃபிளிக்ஸ், அதன் மொபைல் பயன்பாட்டை அதிகப்படுத்தும் நோக்கத்தில், புதிய வெர்டிகல் ஷார்ட் வீடியோ ஃபீச்சரை அறிமுகப்படுத்தவுள்ளது. இது யூட்யூப் ஷார்ட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற வடிவத்தில் செயல்பட்டு, பயனர்கள் திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் சிறப்பான காட்சிகளை ஸ்க்ரோல் செய்து பார்வையிடும் வசதியை வழங்குகிறது.

நெட்ஃபிளிக்ஸ் (Netflix) என்பது உலகம் முழுவதும் பிரபலமான ஓடிடி (OTT) ஸ்ட்ரீமிங் தளமாகும். தற்போது 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கான சந்தாதாரர்களை கொண்டுள்ள நெட்ஃபிளிக்ஸ், திரைப்படங்கள், தொடர்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கண்டென்ட்களை பல மொழிகளில் வழங்குகிறது. லேப்டாப், டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட் என பல்வேறு சாதனங்களில் எளிதாக அணுகக்கூடிய இந்த ஸ்ட்ரீமிங் தளம், பார்வையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்குவதில் சிறந்தது. குறிப்பாக, நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல்ஸ் எனப்படும் சொந்த தயாரிப்புகள், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது, தங்கள் செயலியை மேலும் பயனரிடையே பரவலாக்கும் நோக்கத்தில், நெட்ஃபிளிக்ஸ் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
யூடியூப் – இன்ஸ்டாகிராம் ஸ்டைலில் நெட்ஃபிளிக்ஸ்
இந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் நெட்ஃபிளிக்ஸ் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், தற்போது புதிய வெர்டிகல் வீடியோ ஃபீச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற போலவே செயல்படும். பயனர்கள் நெட்ஃபிளிக்ஸ் திரைப்படங்களின் மற்றும் தொடர்களின் சிறப்பான காட்சிகளை ரீல்ஸ் வடிவில் வெர்டிகல் ஃபார்மட்டில் பார்க்கலாம்.
இது எப்படி செயல்படும்?
Today’s Top Picks for You’ என்ற பகுதியில், ஒவ்வொரு யூசருக்கும் அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட சிபாரிசுகள் வழங்கப்படும். இந்த வீடியோக்கள் வெர்டிகல் முறையில் இருப்பதால், ஸ்க்ரீனில் ஸ்வைப் செய்வதன் மூலம் அடுத்தடுத்த வீடியோக்களைப் பார்க்க முடியும். அதில் ஒரு வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் அதனை கிளிக் செய்து முழுமையாக பார்வையிடலாம். உதாரணமாக ஒரு வெப் சீரிஸில் இருந்து ஒரு காட்சி உங்கள் ஸ்கிரீனில் வருகிறது என்றால் அதனை கிளிக் செய்வதன் மூலம் முழு எபிசோடையும் பார்க்கலாம். மேலும், நண்பர்களுக்கு பகிர முடியும் அல்லது மை லிஸ்ட் என்ற பிரிவில் ஆட் செய்து பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.
சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிக்கும் இளைஞர்களைத் தங்கள் செயலியில் ஈர்க்கும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் இந்த புதிய முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யூட்யூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரம் செலவழிப்பதை குறைத்து, நெட்ஃபிளிக்ஸ் செயலியில் அதிக நேரம் செலவழிப்பார்கள் என அந்நிறுவனம் நம்புகிறது.
IOS மற்றும் Android பயனர்களுக்காக இந்த புதிய ஃபீச்சர் வரும் வாரங்களில் அப்டேட்டாக கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2021ல் அறிமுகமான ‘Fast Laughs’ ஃபீச்சரின் விரிவாக்கமாகும். அந்த நேரத்தில் நகைச்சுவை உள்ளடக்கங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது, அதைக் கடந்து அனைத்து வகையான உள்ளடக்கங்களும் இதில் இடம் பெற உள்ளன. இதன் மூலம் பல புதிய வெப் சீரிஸ்களையும், திரைப்படங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.