சார்ஜ் போட்டபடி வேலை செய்தால், லேப்டாப் பேட்டரி பாதிக்கப்படுமா? உண்மை என்ன?
Laptop Charging Battery Impact : நவீன லேப்டாப்கள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் வருவதால், அதனை சார்ஜ் செய்தபடியே பயன்படுத்துவது ஆபத்தானது அல்ல. ஆனால் நீண்ட நேரம் தொடர்ந்து இந்த முறையை பின்பற்றினால், பேட்டரி செயல்திறன் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, பேட்டரியை பாதுகாக்க அவ்வப்போது நேரடியாக பேட்டரி மூலம் பயன்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக நாம் அனைவரும் லேப்டாப்பில் (Laptop) தான் வேலை செய்து வருகிறோம். பெரும்பாலும் லேப்டாப் சார்ஜில் இருக்கும்போது தான் அதிகம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக வீட்டில் இருந்து பணியாற்றுபவர்கள் (Work From Home) இந்த முறையைத் தான் அதிகம் பின்பற்றுகிறார்கள். காரணம் திடீரென பவர் கட் (Power Cut) செய்யப்பட்டால் லேப்டாப்பில் சார்ஜ் முழுவதும் இருந்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் நம் வேலை பாதிக்கப்படும். ஆனால் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். லேப்டாப் சார்ஜில் இருந்தபடியே தொடர்ந்து வேலை செய்தால் அது பேட்டரியை பாதிக்குமா என்பது தான் அந்த சந்தேகம். இந்த பழக்கம் சரியானதா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சார்ஜ் செய்தபடி வேலை செய்வது சரியானதா?
பொதுவாக சார்ஜ் செய்யும் போது லேப்டாப்பை பயன்படுத்துவது ஆபத்தானது அல்ல. இன்றைய நவீன லேப்டாப்களில் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களுடன் கிடைக்கின்றன. லேப்டாப்பின் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. அதன் படி பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜிங் தானாகவே நின்றுவிடும். லேப்டாப் தானாக ஏசி பவரில் இயங்கும்.
சார்ஜில் இருந்தபடியே பயன்படுத்துவது பேட்டரியை பாதிக்கும்
இருப்பினும், உங்கள் லேப்டாப் சார்ஜ் ஆகும்போது தொடர்ந்து பயன்படுத்தினால் பேட்டரியின் செயல்திறன் படிப்படியாகக் குறையக்கூடும். இதன் பொருள் பேட்டரி முற்றிலும் பாதிப்படையாது. ஆனால் அதன் செயல்திறன் சற்று குறையலாம். குறிப்பாக வீடியோ எடிட்டிங் அல்லது கேமிங் போன்ற அதிக பிராசசஸ் நடைபெறும் பணிகளுக்கு உங்கள் லேப்டாப்பை பயன்படுத்தும்போது, அது விரைவாக வெப்பமடைந்து பேட்டரி ஆயுளைப் பாதிக்கும்.




பேட்டரி ஆரோக்கியத்திற்கு என்ன செய்வது?
- லேப்டாப்பில் சார்ஜ் முழுவதுமாக காலியாகும் வரை காத்திருக்காமல் உடனடியாக சார்ஜ் செய்வது நல்லது.
- லேப்டாப் அதிக வெப்பமாக இருப்பதை உணர்ந்தால், அதனை சிறிது நேரம் அணைத்து விடுங்கள்.
- உங்கள் மடிக்கணினியை நீண்ட நேரம் பிளக்-இன் பயன்முறையில் பயன்படுத்தினால், அவ்வப்போது அதை பேட்டரி பவரில் பயன்படுத்தவும்.
சார்ஜ் செய்தபடி லேப்டாப்பை பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நீங்கள் நீண்ட காலத்திற்கு பேட்டரி செயல்திறனை பராமரிக்க விரும்பினால், அவ்வப்போது பேட்டரி பவரில் பயன்படுத்தவும். அதாவது, எப்போதும் சார்ஜ் செய்து கொண்டே இருக்காதீர்கள். அதே போல சார்ஜ் முழுவதுமாக காலியாகும் வரை பயன்படுத்தாதீர்கள். ஒட்டுமொத்தமாக, உங்கள் லேப்டாப் சார்ஜ் ஆகும்போது வேலை செய்வது எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது. ஆனால் அது குறித்த புரிதல் நிச்சயமாகத் தேவை. மேலே குறிப்பிட்ட சில அடிப்படை விஷயங்களை மனதில் வைத்திருந்தால், உங்கள் லேப்டாப்பின் பேட்டரி நீண்ட காலம் நீடிக்கும். மேலும் செயல்திறன் வலுவாக இருக்கும்.