அடிக்கடி போனில் வரும் நோட்டிஃபிகேஷன்களால் தொல்லையா? அப்போ இதை டிரை பண்ணுங்க
Notification Control : இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களில் வரும் நோட்டிஃபிகேஷன்கள் மிக சிக்கலானதாக மாறியுள்ளது. இதனால் நம் வேலைகளில் கவன சிதறல்களை ஏற்படுத்துகின்றன. இதனைக் கட்டுப்படுத்த நோட்டிஃபிகேஷன் சம்மரி என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்தும் பெரும்பாலான மக்களுக்கு அடிக்கடி வரும் நோட்டிஃபிகேஷன் பெரிய கவனச்சிதறலாக மாறியுள்ளது. வேலை செய்யும் போது, படிக்கும் போது அல்லது ஓய்வெடுக்கும் நேரத்திலும் தொடர்ந்து வரும் செயலி அறிவிப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான நேரங்களில் அது தேவையற்றதாக இருப்பதால் மக்களுக்கு தேவையற்ற தலைவலியை ஏற்படுத்துகின்றன. இதற்கு தீர்வாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் உள்ள நோட்டிஃபிகேஷன் சம்மரி என்ற புதிய வசதி பயனுள்ளதாக உள்ளது. இந்த புதிய வசதி குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இந்த நோட்டிஃபிகேஷன் சம்மரி வசதி மூலம், அவசரமில்லாத நோட்டிஃபிகேஷன்கள் உடனுக்குடன் ஸ்கிரீனில் தோன்றாமல், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டு காட்டப்படும். உதாரணமாக, மாலை நேரம் அல்லது இரவு நேரத்தில் மட்டுமே அந்த நோட்டிஃபிகேஷன்களை பார்க்கும்படி பயனர்கள் அமைத்துக்கொள்ளலாம். இதனால் பகல் முழுவதும் கவனம் சிதறாமல் முக்கிய வேலைகளில் ஈடுபட முடியும்.




இதையும் படிக்க : Gmail : இந்த 2 செட்டிங்க்ஸை உடனே பண்ணுங்க.. இல்லனா உங்க ஜிமெயில் ஏஐ-க்கு இரையாகிடும்!
இந்த வசதி எப்படி செயல்படுகிறது என்றால், ஒவ்வொரு செயலியிலிருந்தும் வரும் அவசரமில்லாத நோட்டிஃபிகேஷன்களை போன் தானாகவே சேமித்து வைத்து, பயனர் தேர்வு செய்த நேரத்தில் மட்டும் ஒரே தொகுப்பாக காட்டுகிறது. இதனால் ஒவ்வொரு சிறிய அறிவிப்புக்கும் போனை எடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. முக்கியமான அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் அவசர அறிவிப்புகள் மட்டும் உடனடியாக வரும் என்பதால், பாதுகாப்பு அல்லது அவசர தகவல்கள் தாமதமாகாது.
இந்த வசதியை பயன்படுத்துவதால் கிடைக்கும் முக்கிய பலன்களில், வேலை அல்லது படிப்பு நேரத்தில் இடையூறுகள் குறைவது, ஸ்கிரீன் டைம் குறைவது, மன அமைதி அதிகரிப்பது ஆகியவை அடங்கும். பயனர் எந்த செயலிகளின் அறிவிப்புகள் இந்த சுருக்கத்தில் சேர வேண்டும் என்பதையும் தானே தேர்வு செய்து கொள்ள முடியும். வங்கி தொடர்பான தகவல்கள், அலுவலக அறிவிப்புகள் அல்லது குடும்பத்தினரின் செய்திகளை தனியாக வைத்துக்கொள்ளவும் முடியும்.
ஆண்ட்ராய்டு போன்களில் இந்த வசதியை இயக்க, முதலில் செட்டிங்ஸ் என்ற பகுதிக்கு சென்று நோட்டிஃபிகேஷன் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கு நோட்டிஃபிகேஷன் சம்மரி என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து, எந்த செயலிகள் இதில் சேர வேண்டும் என்பதை தேர்வு செய்து, நோட்டிஃபிகேஷன்கள் வரும் நேரத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.
இதையும் படிக்க : ஏஐ மூலம் டூர் பிளான் பண்ணுறீங்களா?.. இந்த சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடலாம்!
அதே போல ஐபோன்களில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று நோட்டிஃபிகேஷன் என்பதில், நோட்டிஃபிகேஷன் என்ற ஆப்ஷனை இயக்கி, தேவையான செயலிகளை தேர்வு செய்தால் போதும். இந்த வசதி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், சமூக வலைதள நோட்டிஃபிகேஷன்களால் சோர்வடைந்தவர்கள் மற்றும் பொதுவாக போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து போனை பார்க்கும் பழக்கத்தை குறைத்து, மன அழுத்தம் இல்லாமல் தினசரி பணிகளை செய்ய உதவும் இந்த நோட்டிஃபிகேஷன் சம்மரி வசதியை அனைவரும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.