உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?.. சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்!
Aadhaar Authentication History | இந்தியாவில் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கியில் கடன் வாங்குவது வரை என எல்லா தேவைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், இவ்வாறு மிக முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் கார்டை அதில் இருக்கும் விவரங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம் ஆகும்.
 
                                இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) ஆதார் அட்டை வழங்குகிறது. இந்த ஆதார் அட்டை இந்திய குடிமக்களுக்கின் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது கட்டாயமாக உள்ளது. இதேபோல பல சேவைகளுக்கும் இது மிகவும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் மருத்துவ சிகிச்சை வரை அனைத்திற்கும் இது மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.
முக்கிய விவரங்களை உள்ளடக்கியுள்ள ஆதார் கார்டுகள்
ஆதார் கார்டில் 12 இலக்க எண்கள், ஒரு நபரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, கை ரேகை, கண் ரேகை பதிவு உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். இந்த தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த தகவல்கள் திருடப்பட்டு, அது தவறாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டு மற்றும் அதில் உள்ள விவரங்கள் மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டியதாக உள்ளது. ஆனால் தற்போதுள்ள காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவை திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், உங்கள் ஆதார் கார்டை உங்களுக்கே தெரியாமல் வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?
ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துக்கொள்வதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் “Authentication History” என்ற அம்சத்தை வழங்கிறது. இந்த நிலையில், அதனை பயன்படுத்தி உங்களது ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
- அதற்கு முதலில் https://myaadhaar.uidai.gov.in/login இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா (Captcha) உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு லாக் இன் (Log In) செய்ய வேண்டும்.
- பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள Authentication History என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் ஆதார் பயன்படுத்தியதை தெரிந்துக்கொள்வதற்கான கால அளவை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் உங்கள் ஆதார் கார்டு எப்போதெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் தோன்றும்.
- அதில் நீங்கள் அனைத்து விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த தரவுகளில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அது குறித்து உடனடியாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும். UIDAI-ன் உதவி எண்ணான 1947 அல்லது help@uidai.gov.in என்ற ஜிமெயில் முகவரியை தொடர்புக்கொண்டு புகார் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    