ஓபிஎஸ் நிலை என்ன? மீண்டும் NDA கூட்டணியில் இணைவாரா?.. அண்ணாமலை பளீச்!!
Will ops rejoin the NDA alliance: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுக, தவெக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று கூறி வந்த ஓபிஎஸ், தற்போது தை முடிய இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. அதற்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என்கிறார்

கோப்புப் புகைப்படம்
சென்னை, ஜனவரி 23: ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால், தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில், பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் தற்போது வரை இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க : ஜன.25ல் மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. பங்கேற்கிறார் விஜய்..
மதுராந்தகத்தில் பிரம்மாண்ட கூட்டம்:
இந்த சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இந்த கூட்டத்தில் கூட்டணியில் இணைந்துள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரேமேடையில் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஒருங்கிணைத்து வருகிறார். இதற்காக, அவர் கடந்த 21ம் தேதி இரவு சென்னைக்கு வந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தேஜகூ தலைவர்கள் பங்கேற்பு:
அந்த வகையில், முதலாவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து தங்களது கூட்டணியில் இணைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, பியூஷ் கோயல், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தினார். மேலும், பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
ஓபிஎஸ் நிலை என்ன?
இதற்கிடையே சட்டசபை தேர்தலில் பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அதேபோல், தேமுதிகவும், ராமதாஸ் தரப்பும் மட்டுமே இன்னும் மீதமுள்ளன. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்ற அமித்ஷாவை உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து வந்தார். இதனால், அவர் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுயேட்சையாக தேனி தொகுதியில் போட்டியிட்டார்.
தை முடிவதற்குள் வழி பிறக்கும்:
இப்படி, அக்கட்சியுடன் இணக்கமாக இருந்து வரும் அவர் கூட்டணியில் இடம்பெறுவதில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுக, தவெக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். தொடர்ந்து, இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்கும்போதெல்லாம், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று கூறி வந்தவர், தற்போது தை முடிய இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. அதற்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று தெரிவித்து வருகிறார்.
இதையும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த மேலும் சில கட்சிகள்.. பியூஷ் கோயல் வெளியிட்ட அறிவிப்பு..
நம்பிக்கை கொடுக்கும் அண்ணாமலை:
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஓ. பன்னீர்செல்வம் ஒரு சிறந்த தலைவர், மிகுந்த ஆளுமை கொண்ட மனிதர். அவர் சோதனைகளையும் இன்னல்களையும் கடந்து வந்த ஒரு தலைவர். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார் என்றும், ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.