Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தம்பி அண்ணாமலைக்கு கொள்கையை கடந்து துணை நிற்போம்”.. ஆதரவு கரம் நீட்டிய சீமான்!!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு தம்பி அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும்; அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களை வழிநடத்தும் மதிப்புமிக்கத் தலைவர் பெருமக்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியானதல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார்.

“தம்பி அண்ணாமலைக்கு கொள்கையை கடந்து துணை நிற்போம்”.. ஆதரவு கரம் நீட்டிய சீமான்!!
சீமான், அண்ணாமலை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Jan 2026 10:27 AM IST

சென்னை, ஜனவரி 14: தம்பி அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நாளை (ஜனவரி 15) உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த வெள்ளிக்கிழமை பிராசரம் செய்திருந்தார். அப்போது, அங்கு ’மும்பை, மஹாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது சர்வதேச நகரம்’ என அண்ணாமலை பேசியது தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவருக்கு எதிராக மகாராஷ்டிரா தாக்கரே பிரிவினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: பழைய பொருட்களை எரித்து, மேளம் கொட்டி உற்சாகம்.. களைகட்டிய போகி கொண்டாட்டம்!!

அண்ணாமலைக்கு ஆதரவு கரம் நீட்டிய சீமான்:

இந்நிலையில், அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில், மண்ணின் மைந்தர்களே மண்ணை ஆள வேண்டும்” என்பதே ஒவ்வொரு தேசிய இனத்தின் இறையாண்மை கொள்கை! ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மையான உரிமை! அம்முழக்கங்களை முன்வைத்து மராட்டிய மாநில உரிமைக்காக சிவசேனா, போராடுவது 100 விழுக்காடு சரியானதே! அதேபோன்று , மராத்திய மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போரிடும் சிவசேனா கட்சியின், தாய்மொழி கொள்கையும் 100 விழுக்காடு சரியானதே! தேசிய இனங்களின் உரிமைக்காக போராடும் அனைத்து தேசிய இன மக்களின் கருத்தோடும் உடன்படுகின்றோம். தேசிய இனங்களின் உரிமை மீட்புக்கான போராட்டத்தில் மராத்திய மாநில உரிமைக்காக குரல் கொடுக்கவும், துணை நிற்கவும் தயாராக உள்ளோம்!

தம்பி அண்ணாமலையை வெட்டுவேன் என்பதா?

ஆனால், மும்பை மாநகராட்சி தேர்தல் பரப்புரையின்போது, அம்மண்ணில் நின்று தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, ‘மும்பை மராத்தியர்களின் நகரம் அல்ல, பன்னாட்டு நகரம்’ என்று பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அதை ஏற்பதும், எதிர்ப்பதும் அவரவரின் சனநாயக உரிமை! ஆனால், மும்பைக்கு வந்தால் தம்பி அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன் என்பதெல்லாம் கடும் கண்டனத்திற்குரியது. தம்பி அண்ணாமலையின் கருத்தியல், கோட்பாடு அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் முற்றிலும் முரண்படுகிறோம். அதற்கு நேர் எதிரான, அரசியலை நாங்கள் முன்னெடுக்கிறோம். இருப்பினும், தம்பி அண்ணாமலையின் கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக, தம்பி அண்ணாமலை மும்பையில் கால்வைத்தால் வெட்டுவேன் எனும் கொடும்போக்கு ஒரு போதும் ஏற்புடையதல்ல.

ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமதிப்பது:

அண்ணாமலை ஒரு தனி நபர், ஒரு கட்சியைச்சேர்ந்தவர், குறிப்பிட்ட கொள்கையை ஏற்றவர் என்பதை மட்டும் கருத்தில்கொண்டு பேசுவது ஏற்புடையதல்ல; ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு தம்பி அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும்; அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களை வழிநடத்தும் மதிப்புமிக்கத் தலைவர் பெருமக்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியானதல்ல.

இதையும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கவில்லையா? உங்களுக்கான சிறப்பு அறிவிப்பு!!

அண்ணாமலை தனி நபரல்ல:

கடந்த காலங்களில் ஆந்திர காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் கேட்க நாதியில்லை; நடுக்கடலில் மீனவர்கள் தமிழர்கள் என்பதால் சுட்டுக்கொல்லப்பட்ட போதும் கேட்க நாதியில்லை; அப்படி ஒரு நிலை தமிழ் மண்ணில் இன்று இல்லை. அண்ணாமலை தனி நபரல்ல; முதலில் அவர் தமிழ்த்தேசிய இனத்தின் மகன். தம்பி அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம். தம்பி அண்ணாமலை குறித்த ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.