ரூ.1.67 கோடி பாக்கி… உடனே கட்டுங்க.. கூலித் தொழிலாளிக்கு பறந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!
கூலி தொழிலாளிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.1.67 கோடி வரி பாக்கி இருப்பதாகவும், அதனை செலுத்த கோரி ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுகுறிதுது சம்பந்தப்பட்ட கூலி தொழிலாளி புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்துள்ளது.

ஜிஎஸ்டி நோட்டீஸ்
வேலூர், மே 1: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.1.67 கோடி வரி பாக்கி கோரி ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள வெள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) கூலி வேலை செய்து வருகிறார். எளிமையாக வாழ்ந்து வரும் இவருக்கு, சமீபத்தில் வந்த நோட்டீஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கூலித் தொழிலாளிக்கு பறந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்
அதாவது, ரூ.1.67 கோடி நிலுவையில் உள்ளதாக கூறி ஜிஎஸ்டி நோட்டீஸ் கவிதாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, அவர் சென்னையை தளமாகக் கொண்ட தர்ஷினி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜிஎஸ்டி செலுத்தாததற்காக அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த கவிதா, தனக்கு தவறாக ஜிஎஸ்டி நோட்டீஸ் விதிக்கப்பட்டதாக கவிதா குற்றச்சாட்டி புகார் அளித்தார்.
இந்த குறித்து கவிதா அளித்த புகாரில், “2020ஆம் ஆண்டு கோவிட் ஊரடங்கு காலத்தில் என் மகன் என் மொபைல் போனை ஆன்லைன் கேம் விளையாட பயன்படுத்திக் கொண்டிருந்தான். தொடர்ந்து விளையாட என் பான் எண்ணை கேட்டான். அதன் விளைவுகளை உணராமல் நான் அதைப் பகிர்ந்து கொண்டேன்.
இப்போது இது போலி ஜிஎஸ்டி பதிவிற்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். தர்ஷினி இண்டஸ்ட்ரீஸ் என்ற எந்த நிறுவனத்துடனும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இது மோசடி” என குறிப்பிட்டு இருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
நடந்தது என்ன?
கூலித் தொழிலாளி கவிதாவின் பான் கார்டு எண்ணை வைத்து நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது கணவர் பன்னீர்செல்வத்தின் தனிப்படை விவரங்களையும் வைத்து, தனியார் நிறுவனம் ஒன்று பதிவு செய்துள்ளது. சென்னை வில்லிவாக்கத்தை தளமாகக் கொண்ட ஒரு ஸ்கிராப் வர்த்தக நிறுவனமான தர்ஷினி இண்டஸ்ட்ரீஸ் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனம் 2023–24ஆம் ஆண்டில் ரூ.3.09 கோடி வருமான ஈட்டியதாக காட்டி இருக்கிறது. இதனால், அந்த நிறுவனம் ரூ.55.58 லட்சம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டி இருந்தது. ஆனால், அந்த நிறுவனம் செலுத்த தவறியதால், ரூ.1.12 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.1.67 கோடியாக உயர்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்மையில் கூட, மும்பையில் 20 வயதான கல்லூரி மாணவிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.