தமிழகத்தில் குறையும் வெப்பநிலை.. அதிகரிக்கும் பனிப்பொழிவு.. வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
Tamil Nadu Weather Update: குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் கணிசமான அளவில் வெப்பநிலையின் தாக்கம் குறைந்துள்ளது. இந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
வானிலை நிலவரம், டிசம்பர் 15, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் உறைபனி தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸிலிருந்து பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சூழலில், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் எத்தகைய வெப்பநிலை நிலவும் என்பதைப் பார்க்கலாம். இதன் காரணமாக, கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் கொட்டும் பனி:
இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 16, 2025 தேதி ஆன நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை இருக்கக்கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி கிடையாது…ஜெயக்குமார் தாக்கு!
3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை:
குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் கணிசமான அளவில் வெப்பநிலையின் தாக்கம் குறைந்துள்ளது. இந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பனிப்பொழிவு இருக்குமா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கம், பல்லாவரம், திரிசூலம், கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பாமகவும் தேவையில்லை…எம்எல்ஏ பதவியும் தேவையில்லை….ஜி. கே. மணி ஆவேசம்!
கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2 – 3° செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளது. ஏனைய இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை : ஈரோடு: 32.6° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்): தர்மபுரி: 15.5° செல்சியஸாகவும் இருந்தது.