ஐஏஎஸ் படிக்க வைக்க உதவி.. பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த பெண்!
வேலூரில் ஐஏஎஸ் படிப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சை என்ற பெயரில், பேராசிரியர் ஒருவரிடம் சுமார் 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த குணா தேவி என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முதலில் ஐஏஎஸ் படிப்புக்கு நிதி உதவி கோரிய அப்பெண், பின்னர் ரத்த புற்றுநோய் பாதிப்பு எனக்கூறி மேலும் பணத்தை பறித்துள்ளார்.

குணாதேவி
வேலூர், அக்டோபர் 1: வேலூர் மாவட்டத்தில் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பேராசிரியர் ஒருவரிடம் ரூ.80 லட்சம் வரை மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த குணா தேவி என்ற 24 வயது பெண் வேலூரில் உள்ள தனியார் கலை கல்லூரியில் கடந்த 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை இளங்கலை ஆங்கிலம் படித்துள்ளார். அப்போது அந்த துறை தலைவராக பேராசிரியர் ரூபேஷ் சதீஷ்குமார் பணியாற்றி வந்துள்ளார். இளங்கலை பட்டப்படிப்பு முடித்ததும், தான் அடுத்ததாக ஐஏஎஸ் படிக்க உள்ளதாகவும், அதற்கு போதிய வசதி இல்லை எனவும், நிதி உதவி செய்யுமாறு குணா தேவி ரூபேஷ் சதீஷ்குமாரிடம் உதவி கேட்டுள்ளார்.
அவருக்கு உதவி செய்ய நினைத்த பேராசிரியர் முதற்கட்டமாக ரூ.35 ஆயிரம் கொடுத்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு குணா தேவி செல்போனில் மீண்டும் ரூபேஷ் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தற்போது தான் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் தங்கி பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
Also Read: Money Heist பாணியில் கர்நாடகா வங்கி கொள்ளை… பலே திட்டம் தீட்டிய கொள்ளையர்கள்..!
தனது தந்தை இறந்து விட்டதால் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு பல லட்சம் தேவைப்படுவதாகவும், அதற்கு பண உதவி செய்யும்படியும் வேண்டியுள்ளார். இதனை உண்மை என நம்பிய பேராசிரியர் ரூபேஷ் சதீஷ்குமார் உடனடியாக ரூ.16 லட்சத்தை அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
மேலும் ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி அதன் மூலம் தனது நண்பர்கள், குடும்பத்தினர் என தெரிந்தவர்கள் பலரை இணைத்து மாணவி மருத்துவ சிகிச்சை மற்றும் படிப்பிற்கு உதவும் படி கோரிக்கை விடுத்துள்ளார். அதன் பெயரில் ஏராளமானோர் ரூபேஷ் சதீஷ்குமாரின் வங்கி கணக்கு பணம் அனுப்பியுள்ளனர். மொத்தமாக அந்த பெண்ணுக்கு பேராசிரியர் சுமார் ரூ.70 லட்சம் வரை பண உதவி செய்துள்ளார்.
இந்த நிலையில் குணா தேவி கடந்த சில மாதங்களுக்கு முன் ஐஏஎஸ் பயிற்சி முடித்து விட்டதாக கூறி அவரின் ஐடி கார்டை பேராசிரியரின் செல்போனுக்கு அனுப்பியிருக்கிறார். இதனை கண்ட அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் முசோரியில் உள்ள ஐஏஎஸ் அகாடமிக்கு சென்று குணா தேவி பற்றி விசாரித்துள்ளார். அப்போது அப்படி ஒரு பெண் அங்கு பயிற்சி பெறவில்லை என தெரியவந்தது.
Also Read: சிறுமியின் கழுத்தில் கத்திரிக்கோல் வைத்து மிரட்டல் ; செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு
இதனை தொடர்ந்து பல நபர்களிடம் குணா தேவி பற்றி விசாரித்த போது ஐஏஎஸ் படிப்பு மற்றும் மருத்துவ செலவுக்காக மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூபேஷ் சதீஷ் குமார் செல்போனில் பெண்ணை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறியுள்ளார். மேலும் பணத்தை சில மாதங்களில் கொடுத்து விடுவதாகவும் மிரட்டிய வகையில் பேசியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பேராசிரியர் உடனடியாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குணா தேவி மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தனர். தொடர்ந்து குணா தேவியை கைது செய்தனர். அவர் இதுபோல் வேறு யாரிடமும் ஏமாற்றி பணம் பெற்றுள்ளனரா என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.