வேலூர், மதுரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. வரக்கூடிய நாட்களில் எப்படி இருக்கும்?
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 16ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், மார்ச் 13, 2026: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்தும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் – 36.6°C, திருச்சி – 35.7°C, திருப்பத்தூர் – 35.6°C, கரூர் – 37°C, ஈரோடு – 37.6°C, தர்மபுரி – 36°C, கோவை – 35°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில், மீனம்பாக்கத்தில் 34.6°C மற்றும் நுங்கம்பாக்கத்தில் 32.7°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் வேலூர், மதுரை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 100°F-ஐ கடந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
இதற்கிடையில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 16ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிறுவர்களிடையே மோதல்… அரிவாள் வெட்டு – திருநெல்வேலி அருகே பரபரப்பு
மேலும் மார்ச் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் அதிகரிக்கும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை வருங்கால நாட்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது; அது இயல்புநிலையை ஒட்டியே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி.. ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதில்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 35°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25°C அளவில் இருக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் பகல் நேர வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே நண்பகல் மற்றும் பிற்பகல் நேரங்களில் தேவையற்ற வெளிச்செல்லலை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.