ஓடும் காரில் சாகசம்.. நெல்லை நெடுஞ்சாலையில் இளைஞர்கள் செய்த செயல்.. தட்டித் தூக்கிய போலீஸ்!
Tirunelveli Crime News : திருநெல்வேலி - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் காரில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதனை அடுத்து, போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், கார் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி, ஜூன் 15 : திருநெல்வேலி – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் சொகுசு காரின் மேலே அமர்ந்து சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீப காலங்களில் நெடுஞ்சாலைகள், சாலைகளில் இளைஞர்கள் பலரும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்கள், கார்களில் இளைஞர்கள் சாகச பயணம் மேற்கொள்வதால் மற்ற வாகன ஓட்டிகளிடையே பீதியடைய வைத்துள்ளது. இதனை தடுக்க மாநில போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தாலும், இளைஞர்கள் தொடர்ந்து ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தற்போது நெல்லையில் நடந்துள்ளது.
நெடுஞ்சாலையில் இளைஞர்கள் செய்த செயல்
நெல்லை – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் சொகுசு காரின் மேலே அமர்ந்து சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஓடும் ஆடி காரின் மேல் அமர்ந்து இரண்டு நபர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைளதங்களில் வெளியானது.




அதாவது, திருநெல்வேலி கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் நாங்குநேரி அருகே உள்ள பானாங்குளம் கிராமத்தில் ஆடி கார் ஒன்று வேகமாக சென்றது. இந்த காரில் பயணம் செய்த இளைஞர்களில் 2 பேர், காரின் மேலே அமர்ந்துக் கொண்டு செல்போன் பயன்படுத்தியப்படியும், கைகளை ஆடிக்கொண்டு சென்றுக் கொண்டு இருக்கின்றனர்.
வைரல் வீடியோ
திருநெல்வேலி – கன்னியாகுமரி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில்,
நாங்குநேரி சுங்கச்சாவடி முதல் பானாங்குளம் கார்களின் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞர்கள்.
இரண்டு சொகுசு கார்களில் பயணித்த மூன்று பேர், ஓடும் கார்களின் மேல் பகுதியில் அமர்ந்தும், காரின் கதவுகளைத் திறந்து அதிலிருந்து… pic.twitter.com/x510xuMKff
— Kᴀʙᴇᴇʀ – தக்கலை கபீர் (@Autokabeer) June 13, 2025
சில நிமிடங்கள் கிழத்து, காரில் இருந்த இளைஞர்கள் கதவை திறந்து வைத்து, எழுந்து நின்று ஆடியபடி சென்றிருக்கிறார். வாகனங்கள் தொடர்ந்து செல்லும் அந்த சாலையில் இளைஞர்கள் இதுபோன்று ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.
இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பாதுகாப்பை உணராமல் ஆபத்தான முறையில் பயணம் செய்த இருவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். மேலும், கார் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.