‘டிச.16ல் ஈரோட்டில் விஜய் சுற்றுப்பயணம்’.. அனுமதி கேட்டு சென்ற செங்கோட்டையன்!!
Tvk Vijay's meet: நாளை மறுநாள் (டிச.9) புதுச்சேரியில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதனைத்தொடர்ந்து, ஈரோட்டில் டிச.16ல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள விஜய் அங்கு பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

தவெக தலைவர் விஜய்
ஈரோடு, டிசம்பர் 07: ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் நேரில் மனு அளித்துள்ளனர். இந்த பொதுகூட்டம் நடப்பதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் கவனித்து வருகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், இந்த தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் முதல்முறையாக போட்டியிட உள்ளார். இதற்காக அவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பரப்புரை மேற்கொண்டார். அந்தசமயத்தில், கரூரில் நடந்த விஜய்யின் பரப்புரையின் போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், ஒரு மாதத்திற்கு மேலாக தனது அரசியல் நடவடிக்கைகளை விஜய் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர், பாதிக்கப்பட்டவர்களை சென்னை அழைத்து வந்து ஆறுதல் தெரிவித்த அவர், மீண்டும் தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார்.
இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் 6 முக்கிய புள்ளிகள்…யார் அவர்கள்!
புதுச்சேரியில் டிச.9ல் விஜய் பொதுக்கூட்டம்:
அந்தவகையில், கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் அண்மையில் காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் உள்அரங்கத்தில் மக்களை சந்தித்தார். தொடர்ந்து, தமிழகத்தில் அவரது பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவியது. இதனால், புதுச்சேரியில் ரோடு ஷோ சென்று மக்களை சந்திக்கலாம் என தவெகவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அங்கும் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்கவிவல்லை. பொதுக்கூட்டத்திற்கு மட்டும் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் (டிச.9) புதுச்சேரியில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார்.
ஈரோட்டில் டிச.16ல் விஜய் பொதுக்கூட்டம்:
இதைத்தொடர்ந்து, செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் விஜய் தனது அடுத்த சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளார். அந்தவகையில், அங்கு வரும் டிச.16ஆம் தேதி பொதுக்கூட்டமாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உரிய அனுமதி வழங்கக் கோரி அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் செங்கோட்டையன் மற்றும் தவெக நிர்வாகிகள் நேரில் மனு அளித்துள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் 25,000 பேர் முதல் 40,000 பேர் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அடுத்து போதிய பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறையிடமும் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், தவெகவில் தனக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்று கூறினார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது.. டிச.11ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!!
ரோடு ஷோவை தவிர்த்துள்ளோம்:
மேலும், விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும் என்று கூறிய செங்கோட்டையன், பொதுகூட்டத்திற்கு தனியார் இடத்தை தேர்வு செய்துள்ளதாகவும், ரோடு ஷோவை தவிர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தவெக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.