Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெகவின் வழிகாட்டி தலைவராகிறாரா ஜெயலலிதா? செங்கோட்டையனால் கிளம்பிய பகீர்!

tvk guiding leader Jayalalithaa: செங்கோட்டையன் செய்த சம்பவத்தால் தமிழக வெற்றிக் கழகத்தின் வழிகாட்டி தலைவராக ஜெயலலிதா மாறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அப்படி என்ன செய்தார் என்பது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம் .

தவெகவின் வழிகாட்டி தலைவராகிறாரா ஜெயலலிதா? செங்கோட்டையனால் கிளம்பிய பகீர்!
வாழ்த்து செய்தியில் ஜெயலலிதா படம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 03 Dec 2025 14:41 PM IST

அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும், தற்போதைய தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டலத்தின் அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் கார்த்திகை வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தீமையின் இருள் நீங்கி உங்களது வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும் என்ற வாசகத்துடன் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வாழ்த்து மடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால், அந்த வாழ்த்து மடலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது.

செங்கோட்டையன் சட்டை பையில் ஜெயலலிதா படம்

முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த போதும் அவரது சட்டை பையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது. இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஆகியோரின் படங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல, எனது வாகனத்திலும், எனது சட்டை பையிலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பேன் இது என்னுடைய உரிமை என்றும், இதை தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி…அரசு திட்டவட்டம்!

திராவிட கட்சியின் சாயலாக உருவெடுக்கிறதா தவெக

இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிபாளையத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்கு சென்ற போதும் அங்கும் வைக்கப்பட்ட பேனர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், கே. ஏ. செங்கோட்டையனின் இந்த செய்கையால் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கட்சி தொடங்கி இருப்பதாக கூறிய விஜய்யின் கட்சி தற்போது திராவிட கட்சிகளின் சாயலாக உருவெடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க:மதிமுகவுக்கான அங்கீகாரம்… வைகோவின் பலே தேர்தல் கணக்கு…வரப்போகும் டிவிஸ்ட்

தவெக வழிகாட்டி தலைவராகிறாரா ஜெயலலிதா

விஜய் அறிவித்திருந்த 5 கொள்கை தலைவர்களின் படங்களுடன் சேர்த்து கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்ட கார்த்திகை வாழ்த்து செய்தியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் இடம் பெற்றுள்ளது. இதனால் விஜய் அறிவித்த வழிகாட்டி தலைவர்களுடன் ஜெயலலிதாவும் இணைகிறாரா என்று பலர் கேள்வி எழுப்பி வருவதாக கூறப்படுகிறது. கோபி செட்டிபாளையத்தில் கே. ஏ. செங்கோட்டையன் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் படம் இல்லாதது சர்ச்சையாகி இருந்த நிலையில் தற்போது கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்து செய்தியில் அவரது படமும் இடம் பெற்றுள்ளது.