புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி…அரசு திட்டவட்டம்!
Tvk Vijay General Meeting: புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ரோடு ஷோ நடவத்துவதற்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் தேவையென்றால் பொதுக் கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ளலாம் என்று மாநில அரசு திட்ட வட்டமாக தெரிவித்து உள்ளது.
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மற்றும் மக்கள் சந்திப்புக்காக சாலை வலம் மேற்கொள்வதற்கு அனுமதி கோரி முதல்வர் என். ரங்கசாமியிடம் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் மனு அளித்திருந்தனர். மேலும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தினந்தோறும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து மனு அளித்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக முதல்வர் என். ரங்கசாமி டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
விஜயின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்
இந்த நிலையில், புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சாலை வலம் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை எனவும், வேண்டுமானால் பொதுக் கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ளலாம் எனவும் டிஐஜி சத்யசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிக்கையில், புதுச்சேரியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சாலை வழியாக மக்கள் சந்திப்பை மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைவர்.
மேலும் படிக்க:2026ல் மக்களின் ஆதரவுடன் “விஜய் ஆட்சிக்கு வருவார்”.. செங்கோட்டையன் உறுதி!!




பொதுக்கூட்டம் மட்டும் நடத்த அனுமதி
இதனால், புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி அளிக்க முடியாது. வேண்டுமென்றால் டிசம்பர் 5ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு பழைய துறைமுக வளாகம், புதுச்சேரி விமான நிலையம் அருகே உள்ள வளாகம் உள்ளிட்ட நான்கு இடங்களை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் இன்று தனிப்பட்ட முறையில் முதல்வர் என். ரங்கசாமியை மூன்று முறை சந்தித்து பேசினார். அப்போது, தவெக தலைவர் விஜயின் ரோடு ஷோவுக்கு கண்டிப்பாக அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
மேலும் படிக்க: தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி? விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு
தவெக பொதுச்செயலாளர் கூறுவது என்ன
ஆனால், தற்போது புதுச்சேரி அரசு உறுதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் ரோடு ஷோக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், உடனடியாக பொதுக் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்ய முடியாது. ரோடு ஷோ என்றால் சுலபமாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.